• Mon. Mar 27th, 2023

ஜன்னல் கம்பியை அறுத்து வங்கியில் கொள்ளை முயற்சி; இருவர் கைது!

திருச்செங்கோடு இந்தியன் வங்கி கிளையில் ஜன்னலை அறுத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் கைது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மேற்கு ரத வீதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி கிளையில் கடந்த ஞாயிறு இரவு கொள்ளை முயற்சி நடைபெற்றது. வங்கியின் முன்புற மின்விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமராக்களின் இணைப்புகளை துண்டித்து விட்டு வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து கொள்ளையர்கள் வங்கியின் உள்நுழைந்து பாதுகாப்பு அறையை திறக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அந்த கொள்ளை முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இது குறித்து திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் காவல்துறையினர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை நடத்தி வந்தனர். கொள்ளை முயற்சி தோல்வி அடைந்ததால் 30 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று காலை ராஜாகவுண்டம் பாளையத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பல்சர் பைக்கில் வந்த 2 பேர் கை பையை பறித்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்செங்கோடு மலை சுற்றுபாதையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பல்சர் பைக் ஒன்றில் வந்த 2 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது பெண்ணிடம் கைப்பை பறிப்பு மட்டுமின்றி, வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து திருச்செங்கோடு மாங்குட்டை பாளையத்தை சேர்ந்த அஜித் குமார் என்கிற சரவணகுமார் 23 மற்றும் சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *