• Thu. Apr 25th, 2024

பாஜக இருக்கும் வரை பாக்-இந்தியா நல்லுறவுக்கு வாய்ப்பில்லை..!

ByA.Tamilselvan

Nov 22, 2022

பாகிஸ்தான் – இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால், பாஜக ஆட்சியில் இருக்கும் வரை அது நடக்க வாய்ப்பில்லை என இம்ரான்கான் கூறினார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், இங்கிலாந்து ‘தி டெலிகிராப்’ பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது; “இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் வர்த்தகத்தை நிறுவினால் அடையக்கூடிய பொருளாதார நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும். ஆனால், காஷ்மீர் பிரச்சினை முக்கிய தடையாக இருந்தது. இப்பிரச்சினையை தீர்ப்பது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்.
ஆனால், பாஜக அரசாங்கம் மிகவும் கடுமையானது. அவர்கள் பிரச்சினைகளில் தேசியவாத நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். பாகிஸ்தான் – இந்தியா இடையே நல்லுறவை விரும்புகிறேன். ஆனால், இந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் போது அது நடக்க வாய்ப்பில்லை. தேசியவாத உணர்வுகளை தூண்டிவிடுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வாய்ப்பில்லை என்ற நிலை ஏமாற்றம் அளிக்கிறது.
நான் மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆப்கானிஸ்தான், ஈரான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பாகிஸ்தானின் அனைத்து அண்டை நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த முயற்சி செய்வேன். உண்மையில் எங்களுக்கு அனைத்து நாடுகளுடனும் நல்லுறவு தேவை. மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க சிறந்த வழி அனைவருடனும் நல்லுறவை வைத்து வர்த்தகம் செய்ய வேண்டும். இதன் மூலம் தான் மக்களுக்கு உதவ முடியும்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *