ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தமிழக பாஜக நிர்வாகிகள் இரண்டு பேருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மோசடி வழக்கில், லட்ச கணக்கான மக்களிடம் ரூ.2438 கோடி பணத்தை ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் 11 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் எஞ்சிய 5 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கண்டு பிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரீஸ் என்பவர் வழக்கின் முக்கிய எதிரி ஆவார். அவர் 11 நாட்கள் காவல்துறையால் விசாரிக்கப்பட்டார். அதில் ஹரீஸ் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் 84 கோடி ஆருத்ரா நிறுவனத்திற்கு பெற்றதும், ஆனால் அவருக்கு சுமார் 130 கோடி ஆருத்ரா நிறுவனத்திலிருந்து தரப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்தபோது காஞ்சிபுரம் ஹரீஸ் தன் பெயரிலும், உறவினர்கள் பெயரிலும் சுமார் 15 கோடி மதிப்புள்ள சொத்துகள் வாங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சில நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதும், தொழில்கள் தொடங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. அவர் பயன்படுத்திய கார், மொபைல்போன் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹரீஸ் ஆருத்ரா நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருந்தபோது பா.ஜ.கவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவில் மாநில செயலாளராக இருந்துள்ளார். பாஜக கட்சியில் விளையாட்டு பிரிவில் மாநிலப் பொறுப்பு பதவி பெறுவதற்காக முதலீட்டாளர்களுக்கு தான் திருப்பித் தரவேண்டிய பணத்திலிருந்து அக்கட்சியை சேர்ந்த சில நபர்களுக்கு பணம் கொடுத்தது பற்றியும் தெரிவித்துள்ளார். அதன்படி பணம் கொடுத்ததாக கூறப்பட்ட பா.ஜ.க, வழக்கறிஞர் பிரிவு அட்வகேட் அலெக்ஸ் என்பவருக்கும் ராணிப்பேட்டை பா.ஜ.க மாவட்ட பொறுப்பிலுள்ள டாக்டர்.சுதாகர் என்பவருக்கும் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.