நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சார்ந்த பள்ளி மாணவி பிரிஷா. பாளையங்கோட்டை மீனா சங்கர் வித்யாலயாவில் எட்டாவது வகுப்பு பயிலும் இவர் யோகாவில் 70 உலக சாதனைகள் நிகழ்த்தியவர். மிகச் சிறிய வயதிலேயே மூன்று டாக்டர் பட்டங்களை பெற்றவர். இவருக்கு அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை சார்பாக பாராட்டு விழா நெல்லையில் நடைபெற்றது.
யோகாவில் 70 உலக சாதனைகள் படைத்துள்ள மாணவி பிரிஷாவை பாராட்டி நியூ ஜெருசலேம் பல்கலைக்கழகம், அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம், இந்தியன் எம்பயர் பல்கலைக்கழகம், ஆகிய மூன்று பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளன.இளம் வயதிலேயே யோகா ஆசிரியருக்கான மத்திய அரசு சான்றிதழை பெற்றுள்ளார். திருநெல்வேலியில் உள்ள பார்வையற்றோர் பள்ளி,முதியோர் இல்லம், காவல்துறையினர், என்சிசி மாணவர்கள், எய்ட்ஸ் ஹோம் என பல்வேறு தரப்பினருக்கு இலவச யோகா பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். மேலும் உலகெங்கிலும் யோகா பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்தி பல்வேறு தரப்பினரின் பாராட்டுதல்களையும் பெற்று வருகிறார். யோகா ராணி, லிட்டில் யோகா ஸ்டார், யோக ரத்னா யோகா கலா ஸ்ரீ போன்ற பல்வேறு பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
கண்ணைக் கட்டிக் கொண்டு எதிரில் இருப்பவற்றை துல்லியமாக சொல்வது இவரது தனித்திறமை. எதிர்காலத்தில் நடக்க இருப்பவற்றை கூட துல்லியமாக சொல்லிவிடுவார். கண்ணைக் கட்டிக் கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிள் ஓட்டி அதிலும் உலக சாதனை படைத்துள்ளார். யோகா இன்றே செய்வோம்- இன்பம் பெறுவோம் என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூல் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.
இவரது சாதனைகளை கேள்வியுற்ற நெல்லை அறிவுச்சுடர் அரியமுத்து அறக்கட்டளை நிறுவன தலைவர் கல்வியாளர் முனைவர். குணசேகர் அரிய முத்து அவருக்கு பாராட்டு விழா ஒன்றினை ஏற்பாடு செய்தார். நிகழ்வில் மாணவி பிரிஷா பொன்னாடை அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார். மேலும் அவரை பாராட்டும் விதமாக கேடயம், மரக்கன்றுகள், புத்தகங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் பேசிய கல்வியாளர் முனைவர். குணசேகர்” யோகா என்பது இந்தியாவின் 5000 ஆண்டு பழமை வாய்ந்த உடல் சார்ந்த அறிவு. இந்தியாவில் தோன்றி வழிவழியாய் வளர்ந்து வரும் ஒரு ஒழுக்க நெறி. இது உடலையும், உள்ளத்தையும் நலத்துடன் வைத்து போற்றும் ஒழுக்கங்கள் பற்றிய நெறி. உடல் மற்றும் உயிர், மனம், அறிவு இவற்றை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கும் அறிவியல்.
சிறிய வயதிலேயே தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு ஒரு சரியான முன் உதாரணமாக மாணவி பிரிஷா திகழ்கிறார். இவ்வளவு சிறிய வயதிலேயே 70 உலக சாதனைகளை நிகழ்த்தியதுடன், மூன்று டாக்டர் பட்டங்களை பெற்றுள்ளது மிக மிக பாராட்டிற்கு உரியது. இதற்கு இவரை வழிநடத்திய இவரது பெற்றோரை மனதார பாராட்டுகிறோம். இவரது தாயார் இவரை மிக சிறப்பாக வழி நடத்தி மிகச்சிறந்த சாதனையாளராக மாற்றி உள்ளார். இவரைப் போன்ற இளம் சாதனையாளர்கள் மேன்மேலும் ஊக்கப்படுத்தப்பட வேண்டும். இதற்காக அறிவுச் சுடர் அறக்கட்டளை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
மாணவி பிரிஷா மேன்மேலும் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்த அறிவுச்சுடர் அரிய முத்து அறக்கட்டளை சார்பாக வாழ்த்துகிறேன்” என்றார். நிகழ்ச்சியில் பென்ஸ் நிறுவன இயக்குநர் ரபீந்தர சைலபதி, பாஜக கூட்டுறவு பிரிவு மாநில துணைத் தலைவர் கெல்லிஸ் பா. அருமை துரை, லயன். அருண் இளங்கோ, பாஜக திருநெல்வேலி தெற்கு மாவட்ட செயலாளர் சின்னத்துரை, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவர் முருகேசன், திருநெல்வேலி வடக்கு மாவட்ட வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு துணைத் தலைவர் ஆல்வின் முருகேஷ், மற்றும் சுப்பிரமணியன், மாரிமுத்து, ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.