

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள அண்ணங்கார குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோரும் ஆடி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான ஆடி திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்று மகாபாரத கதைகள் கூறப்பட்டு, சாமி வீதிஉலா நடைபெற்று வந்தது.

இதனை தொடர்ந்து நேற்று 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பக்தர்கள் அண்ணங்கார குப்பம் குளத்தில் இருந்து காளி மாரி வேஷம் இட்டு அழகு குத்தி பால்குடம் எடுத்துக்கொண்டு கவரப்பாளையம், சூனாபுரி ஆகிய உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள தெருக்கள் வழியாக ஊர்வலகமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். பக்தர்கள் எடுத்து வந்த பால் சக்தி மாரியம்மன்க்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வாசலில் இருந்துஅண்ணங்கார குப்பம் கடைவீதி வரை 100 மீட்டர் அளவிற்கு கல் உப்பினை தரையில் பரப்பி வைத்திருந்தனர் கோவில் பூசாரி முருகன் அதன் மீது கையில் தீச்சட்டி ஏந்திக்கொண்டு அங்க பிரதச்சனை செய்தார். பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி எனக் கூறி அம்மனை வேண்டி பிரார்த்தித்தனர். இதில் ஆண்டிமடம் மற்றும் அருகில் உள்ள கிராம பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் வீடுகள்தோறும் மா விளக்கு வைத்து அர்ச்சனை செய்து கிராமத்தில் புகழ்பெற்ற வழிபட்டனர்.


