• Fri. Apr 26th, 2024

உடம்பில் 600 இடத்தில் ‘டாட்டூ’ குத்திக்கிட்ட மாடல் அழகி

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாட்டூ மாடல் அழகி தனது உடல் முழுக்க டாட்டூ குத்திக் கொண்டதால், அவரை பலரும் அவமதிப்பு செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் மனிதர்களின் ஆதிகாலம் தொட்டே வழக்கத்தில் இருந்துவருகிறது. இன்றைய மாடர்ன் உலகில் டாட்டூ (Tattoo) என்ற பெயரில் இது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் என அனைத்துப் பிரபலங்களும் தங்களுக்கு விரும்பிய உருவங்களை, டிசைன்களை டாட்டூவாக வரைந்து கொள்கின்றனர். தற்போது, கரித்துண்டு (கார்பன்), சைனா மை போன்ற மைகளைப் பயன்படுத்தி கருமை அல்லது கருமை கலந்த செம்மை நிறத்தில் டாட்டூ தீட்டுகிறார்கள்.

பச்சை நிறத்துக்கு குரோமிக் ஆக்சைடு பயன்படுத்துகிறார்கள். மெர்குரி (பாதரசம்), காட்மியம், இரும்பு ஆக்சைடு, ஆன்டிமணி, பெரிலியம், குரோமியம், நிக்கல், கோபால்ட், ஆர்சனிக் ஆகிய ரசாயனங்களும் கலக்கப்படுகின்றன. ஆபத்தான ரசாயனங்களைப் பயன்படுத்துவதால் டாட்டூ பல உடல்நலப் பாதிப்புகளை உருவாக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்த நிலையில் உடல் முழுவதும் டாட்டூ போட்டுக் கொண்ட மாடல் அழகி ஒருவர், பொது இடங்களில் தனக்கு ஏற்பட்ட அவமானங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். ஆஸ்திரேலியா நாட்டின் பிரிஸ்பேனில் உள்ள வெஸ்ட்ஃபீல்டு பகுதிக்கு டாட்டூ மாடல் அழகி அம்பர் லூக் (26) ஷாப்பிங் சென்றார். உடல் முழுக்க அவர் டாட்டூ வரைந்திருந்ததால், அவரது தோற்றத்தைப் பார்த்ததும் அப்பகுதிமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரை சிலர் வெறுத்துப் பார்த்தனர். மேலும் சிலர் அவரை நோக்கி கேவலமான கருத்துகளும், சைகைகளையும் காட்டினர். அதிர்ச்சியடைந்த அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இன்று நான் ஷாப்பிங் சென்டர் வழியாக நடந்து கொண்டிருந்தேன். அப்போது என்னை பார்த்த மக்கள் ஒருவிதமாக கிண்டல் செய்தனர். அவர்களின் எதிர்வினையை பார்த்து முதலில் ஆச்சரியமடைந்தேன்.

என்னிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. நான் சமூகத்திற்கு அப்பாற்பட்டவளாக பார்த்தனர். நான் எதையும் மிகைப்படுத்தி கூறவில்லை. என் பின்னால் வந்தவர்கள் அல்லது நான் கடந்து சென்ற நபர்கள் என்னை அசிங்கமாக திட்டினர். சமூகத்தில் ஏன் இவ்வளவு வெறுப்பு இருக்கிறது? உங்களைப் பற்றி தெரியாத ஒருவர் மீது வெறுப்பை வெளிப்படுத்தும் துணிச்சல் உங்களுக்கு எங்கிருந்து வருகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் வேற்று கிரகவாசி போன்று உணர்ந்தேன். மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பற்றி எதற்காக விஷமத்தனமாக பேசுகின்றீர்கள்? பொது இடங்களில் என்னிடம் எதிர்மறையான கருத்துகளை கூறுவோரிடம் இனிமேல் நின்று கூட பேசமாட்டேன்.

என்னை அவர்கள் முறைத்துப் பார்த்தால், நானும் அவர்களை முறைத்துப் பார்ப்பேன். எனது உடலில் அதிகளவு டாட்டூ மை வரையப்பட்டுள்ளதால், என்னிடம் பாகுபாடு காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை’ என்று விரக்தியுடன் தெரிவித்துள்ளார். இவர், சுமார் 600க்கும் மேற்பட்ட இடங்களில் தனது உடலில் டாட்டூ குத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *