மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், சித்திரை திருவிழா என மதுரை மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டுள்ள நிலையில், பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளது பாஜக.
மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரை நேரில் சந்தித்த மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், பக்தர்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல விதிக்கப்படுள்ள தடையை மறுபரிசீலனை செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வந்துவிட்டாலே மதுரை மாநகரம் முழுவதும் திருவிழாக் கோலம் பூண்டுவிடும். மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், சித்திரை திருவிழா என வரிசையாக நிகழ்ச்சிகளும், வாண வேடிக்கைகளும் மதுரையை களை கட்ட வைத்துவிடும். இந்நிலையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு பாஜக தரப்பில் கோரிக்கை பட்டியல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
அதில், மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படும் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல் கட்டிமுடிக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானோர் திரள்வார்கள் என்றும் எனவே அதற்கேற்ப பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை இப்போதே கட்டமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில் வடக்கு கோபுர வாசலில் பொங்கல் வைப்பதற்கும் மொட்டை போடுவதற்கும் அனுமதி தர வேண்டும் என பாஜக மாவட்ட தலைவர் சரவணன் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளார். குடிநீர் வசதி, மொபைல் கழிப்பறை வசதி, கூடுதல் காவலர்கள் பணியமர்த்துவது, CCTV நிலையங்கள் அதிகப்படுத்துவது, தீ விபத்தில் சேதமடைந்த வசந்தராயர் மண்டபத்தை புனரமைப்பது, அவசர மருத்துவ உதவி போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும் அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நான்கு மாசி வீதிகளிலும் மின்கம்பிகளை தரை பகுதியில் கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்தும் இன்னும் செயல்படுத்தப்படாமல் இருப்பதாகவும் அதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் எனவும் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் கோரிக்கை விடுத்துள்ளார். இதனைக் கேட்டுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்வதாக உறுதியளித்திருக்கிறார்.