• Tue. Feb 18th, 2025

கும்பமேளாவில் இறந்தவர்களின் புள்ளிவிவரங்களை கொடுங்கள்: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

ByP.Kavitha Kumar

Feb 4, 2025

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்த மகா கும்பமேளாவில் இறந்தவர்களின் புள்ளிவிவரங்களையும் தயவுசெய்து கொடுங்கள் என்று சமாஜ்வாதி கட்சி தலைவரும், மக்களவை உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா. கடந்த 14-ம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் கும்பமேளா நடைபெற உள்ளது. கடந்த ஜனவரி 29 அமாவாசையை முன்னிட்டு கும்பமேளாவில் அதிக பக்தர்கள் கலந்துகொண்டனர். அப்போது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கும்பமேளா விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என சமாஜ்வாதி தலைவரும், மக்களவை உறுப்பினருமான அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது அகிலேஷ் யாதவ் இன்று பேசுகையில், மத்திய அரசு தொடர்ந்து பட்ஜெட் புள்ளி விவரங்களை வழங்கி வரும் அதே வேளையில், மகா கும்பமேளாவில் இறந்தவர்களின் புள்ளி விவரங்களையும் தயவுசெய்து கொடுங்கள். மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். மகா கும்பமேளா பேரிடர் மேலாண்மை மற்றும் தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

அத்துடன் மகா கும்பமேளாவில் இறந்தவர்களின் புள்ளிவிவரங்கள், காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, மருந்துகள், மருத்துவர்கள், உணவு, தண்ணீர், போக்குவரத்து ஆகிய புள்ளிவிவரங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மகா கும்பமேளா துயரத்திற்கு, பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இரட்டை எஞ்சின் அரசு மீது எந்த குற்றமும் இல்லை என்றால், புள்ளி விவரங்கள் ஏன் மறைக்கப்பட்டன, அழிக்கப்பட்டன என்று அகிலேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.