டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பது தொடர்பாக இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்மொழியப்பட்ட சட்ட முன்வடிவை எதிர்த்து அதிமுக சார்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் இந்த விவகாரத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இன்று மாலை 4.30 மணியளவில் தேனி நேரு சிலை அருகே அதிமுக தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்,
புரட்சித்தலைவி அம்மா பெயரை நீக்காதே, போடாதே போடாதே பொய் வழக்கு போடாதே, கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் பல்கலைக் கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை நீக்கும் முயற்சியை கண்டிக்கின்றோம், ஓ.பி.எஸ் உட்பட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைக் கைது செய்யப்பட்டதைக் கண்டிக்கின்றோம், என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.