தமிழக கேரள எல்லையில் உள்ள அமைந்துள்ள கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி அருகே உள்ள அட்டப்பள்ளம் என்ற ஊரைச் சேர்ந்தவர் தனீஷ் (24). இவரும் அணக்கரை என்ற பகுதிக்கு அருகே உள்ள புத்தடியை சேர்ந்தவர் அபிராமி(20) என்பவரும் கடந்த மூன்று வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்ய முடிவு செய்த இந்தக் காதல் ஜோடி, தங்கள் காதல் விவகாரத்தை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தினர். ஆனால் தனீஷின் பெற்றோர்கள் இவர்களின் காதல் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் திருமணம் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று எண்ணி மனமுடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்ய முடிவு செய்தனர். நேற்று பிற்பகலில் தனீஷ் தனது உறவினர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களது காதலை ஏற்க எனது பெற்றோர் மறுப்பதால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனீஷின்- உறவினர் தனிஷின் பெற்றோருக்கும், குமுளி போலீசாருக்கும் உடனடியாக தகவல் அளித்தார்.
தனிஷின் பெற்றோரும், காவல்துறையினரும் இணைந்து பல இடங்களில் தேடி வந்துள்ளனர். காவல்துறையினரின் விசாரணையில் கிடைத்த தகவலின் பேரில் குமுளியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தேடிப் பார்த்தபோது இறந்த நிலையில் காதலர்களின் உடல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து குமுளி போலீசார் காதலர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெற்றோர்கள் காதலை ஏற்றுக்கொள்ளாததால் காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரள மாநில எல்லைப் பகுதியான குமுளியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு.. விஷம் குடித்து உயிரை மாய்த்த காதலர்கள்..!
