

அதிமுக அலுவலக கலவரம் தொடர்பாக விளக்கமளிக்க எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தது. அப்போது ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓ.பி.எஸ். ஆவணங்களை எடுத்து சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார்.இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் மற்றும் கை ரேகை நிபுணர்கள், பொதுப்பணி துறை அதிகாரிகள் கடந்த 7ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் கலவரம் தொடர்பாக விளக்கமளிக்க எடப்பாடி பழனிசாமி , ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை இபிஎஸ் தரப்பினரும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி நேரம் வரை ஓபிஎஸ் தரப்பினரும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எழும்பூரில் இருக்கும் சிபிசிஐடி அலுவலகத்தில் இரு தரப்பில் இருந்து முக்கிய நிர்வாகிகள் இன்று ஆஜராகி விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
