

தொடர்மழை எதிரொலி, 10 ஆண்டுகளுக்கு பிறகு மாறுகால் பாயும் பூவந்தி கண்மாய். ஆபத்தை உணராமல் ஆனந்தமாக கண்மாயில் விளையாடும் இளைஞர்கள்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பூவந்தி கண்மாய் தொடர் மழை காரணமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பூவந்தி கண்மாய்க்கு மதுரை மாவட்ட பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக தொடர்ந்து கண்மாய்க்கு தண்ணீர் வருவதால், கண்மாய் நிரம்பியது.

கழுங்கு திறக்கப்பட்ட நிலையில் தண்ணீர் தடுப்பணையை தாண்டி மாறுகால் பாய்ந்து வருகிறது. கண்மாயில் இருந்து வெளியேறும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் இளைஞர்கள் ஆர்வத்துடன் நீச்சலடித்து குளியல் போட்டு மகிழ்ந்து வருகின்றனர். சிலர் தண்ணீரில் அடித்து வரும் மீன்களை லாவகமாக மீன்பிடித்து வருகின்றனர்.

பூவந்தி கண்மாயில் வெளியேறும் தண்ணீர் சங்கிலி தொடர் போல மடப்புரம், கணக்கன்குடி கண்மாய்கள் நிரம்பி தண்ணீர் வைகை ஆற்றில் கலக்கிறது. மேலும் இக்கண்மாய்களை நம்பியுள்ள விவசாயிகள் தண்ணீர் நிரம்பியதால் மகிழ்ச்சியுடன் விவசாய பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொண்டு வருகின்றனர்.

