பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை எதிர்கட்சிகளின் ஒத்துழைப்போடு சுமூகமாக நடத்த வரும் 17ம் தேதி அனைத்தக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத் தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளையில், அக்னிபத், மகாராஷ்டிரா அரசியல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அனல் பறக்கும் எனத் தெரிகிறது. மேலும், 17 நாட்கள் நடக்கும் இந்தக் கூட்டத்தின்போது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், வரும் 17ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் வரும் படி மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளின் ஆதரவை பெறுவதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகக் கருதப்படுகிறது.