• Thu. Apr 25th, 2024

பூத் கமிட்டி செலவுக்குக்கூட பணம் கொடுக்கல .. அதிமுக நிர்வாகிகள் அதிருப்தி

பூத் கமிட்டி செலவுக்குக் கூட கட்சியிலிருந்து பணம் கொடுக்காததால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நடத்தப்படும் தேர்தல் என்பதால், வெற்றி பெற்று உள்ளாட்சி அமைப்புகளை முழுமையாக கைப்பற்ற வேண்டுமென திமுகவினர் ஆரம்பத்திலிருந்தே தீவிர முயற்சி மேற்கொண்டனர். திமுக வேட்பாளர்களின் செலவுக்கு அந்தந்த ஊரிலுள்ள அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பெருமளவில் உதவி செய்தனர்.

திருச்சி மாநகராட்சியிலும் இதேநிலை காணப்பட்டது. திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு, உளவுப்பிரிவு ஆகியவை அவ்வப்போது அளித்த சர்வே முடிவுகளின்படி மாநகராட்சி பகுதியில் பலவீனமாக உள்ள சில வார்டுகளைக் கண்டறிந்து, அவற்றில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு கூடுதலாக நிதி கொடுத்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டனர். இதனால் திமுக வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து நேற்று வாக்குப்பதிவு முடியும்வரை உற்சாகத்துடன் காணப்பட்டனர்.

ஆனால் அதிமுக தரப்பிலோ நிலைமை தலைகீழாக காணப்பட்டது. அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட 64 பேரில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், வசதி படைத்தவர்களைத் தவிர, மற்ற வேட்பாளர்கள் ஆரம்பத்திலிருந்தே தேர்தல் செலவுக்குப் பணமின்றி அவதிப்பட்டனர். வாக்காளர்களிடம் விநியோகிப்பதற்கான துண்டறிக்கைகள், பிரச்சார வாகனங்களுக்கான வாடகை, உடன் வருவோருக்கான போக்குவரத்துச் செலவு, பூத் கமிட்டி செலவு என ஒவ்வொன்றுக்கும் சிரமப்பட்டனர். கடைசி நாள்வரை, கட்சியிலிருந்து பணம் வந்து சேராததால் வாக்குப்பதிவு நாளான நேற்று அதிமுக வேட்பாளர்களில் சிலர் சோர்வுடன் காணப்பட்டனர். மேலிடத்திலிருந்து பணம் வழங்கப்படாமல் இருந்தாலும் திருச்சிக்கு எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்த போது , முன்னாள் அமைச்சரிடம் வேட்பாளர் ஒருவரை தேர்வு செய்து அதன் மூலம் ஒரு தொகையை விநியோகம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் அந்த பேச்சுக்கும் கட்சியில் மரியாதை இல்லை, எந்த வித பணமும் கட்சியினருக்கு வந்து சேரவில்லை என்ற கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *