நாளை நடைபெறவிருந்த பொறியியல் பொது கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 431 பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புகளில் சேர்வதற்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு வருகிற சனிக்கிழமை தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 150 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள் காலியாக உள்ளன. அத்துடன் பொதுப் பிரிவு கலந்தாய்வானது நாளை தொடங்கி நான்கு சுற்றுக்களாக நடைபெற இருந்தது. சிறப்பு பிரிவில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்தது. இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் பொறியியல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை தொடங்க இருந்த BE பொதுப்பிரிவு கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.