

தமிழக அரசு அறிவித்துள்ள விடுதிகளுக்கான புதிய உணவுப்பட்டியலுக்கு கூடுதல் நிதி ஒதுக்கினால் மட்டுமே நடைமுறை படுத்த முடியும்; தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அரசுக்கு வலியுறுத்தல்
மதுரை மேலபெருமாள் மேஸ்திரி வீதியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர்கள் ஆசிரியர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள விடுதி மாணவர்களுக்கான புதிய உணவுப்பட்டியலை செயல்படுத்துவதில் உள்ள நிதி பற்றாக்குறையால் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நாளொன்றுக்கு பள்ளி விடுதிகளுக்கு 1000 ரூபாயும், கல்லூரி விடுதிகளுக்கு 1,100 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டு வருகிறது. அதனை பள்ளி விடுதிகளுக்கு 1600 ரூபாயும், கல்லூரி விடுதிகளுக்கு 2000ரூபாயும் உயர்த்தி வழங்கிட வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் மற்றும் துப்புரவு பணியாளர் பணியிடங்களை விரைவில் நிரப்ப தமிழக அரசுக்கு வலியுறுத்தினர், மேலும் விடுதி காப்பாளர்கள் நீண்ட நாள் கோரிக்கையான பதவி உயர்வு குறித்த ஆலோசனைகள் மற்றும் தொடர் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
