கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்து வந்த கொரோனா 2ம் அலை பரவல் காரணமாக பேருந்து போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. அந்த வகையில் மே மாதத்தில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கு காலத்தில் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைகள் செயல்படவில்லை. இதனிடையே தமிழக அரசின் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் தாக்கம் வெகுவாக குறைந்து வருகிறது.
இதைக் கவனத்தில் கொண்டு கடந்த ஜூலை மாதம் முதலே பல்வேறு செயல்பாடுகளுக்கு அரசு அனுமதி கொடுத்தது. அந்த வகையில் 2 மாதங்கள் கழித்து மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து சேவைகள் அனைத்தும் 50சதவீதம் திறனுடன் மீண்டும் செயல்படத் தொடங்கிய நிலையிலும் கூட, குளிர்சாதன பேருந்துகள் மட்டும் தொடர்ந்து இயக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், நாளை முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு போக்குவரத்தை சார்ந்த 702 ஏ.சி பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனா அதிகரிப்பால் மே 10 முதல் நிறுத்தப்பட்ட அரசு ஏ.சி பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 702 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படும் என சமீபத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்தார்.
சென்னை மாநகரில் 48 குளிர்சாதன பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் (S.E.T.C) சார்பாக 340 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.சி. பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் முக கவசம் அணிய வேண்டும், கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு தான் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குளிர்சாதன பேருந்துகள் தூய்மைப்படுத்தி, பழுதுபார்க்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.