• Thu. Apr 25th, 2024

ஆதாரை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிப்பது கட்டாயம்: மத்திய அரசு

ByA.Tamilselvan

Nov 11, 2022

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதாரை புதுப்பிப்பது கட்டாயம் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறவும், வங்கி தொடர்பான சேவைகளுக்கும், பத்திரப்பதிவு செய்யவும் ஆதார் பயன்படுகிறது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம், அனைவருக்கும் ஆதார் எண் வழங்கி வருகிறது. இதுவரை 134 கோடி ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஆதார் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. திருத்தம் செய்யப்பட்ட விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டுள்ளது.
அதில் …ஆதார் அட்டைதாரர்கள், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். இதற்காக தங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணத்தையும், முகவரியுடன் கூடிய அடையாள ஆவணத்தையும் சமர்ப்பித்து, ‘அப்டேட்’ செய்ய வேண்டும். அதன்மூலம், ஆதார் தரவுகளை சேமித்து வைக்கும் மத்திய அடையாள தரவுகள் சேமிப்பகத்தில், ஆதார் தொடர்பான தகவல்கள் தொடர்ச்சியாக துல்லியமாக இருப்பதை உறுதி செய்ய முடியும். இந்த பணியை ஆதார் அட்டைதாரர்கள் செய்வதற்காக, ‘மைஆதார்’ இணையதளத்திலும், ‘மைஆதார்’ செயலியிலும் ‘அப்டேட் டாக்குமெண்ட்’ என்ற பிரிவை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சேர்த்துள்ளது. இதுதவிர, பக்கத்தில் உள்ள ஆதார் மையங்களுக்கு நேரில் சென்றும், ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
ஆதார் எண் வழங்கிய நாளில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருதடவை இந்த ஆவணங்களை ஆதார் அட்டைதாரர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *