உத்தராகண்ட் மாநிலம், ரிஷகேஷில் இயங்கி வரும் எயம்ஸ் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை கைது செய்வதற்காக மருத்துவமனை அவசர சிகிச்சை வளாகத்திற்குள்ளேயே போலீஸ் வாகனம் சென்றிருப்பது வைரலை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் மத்திய அரசுக்கு சொந்தமான எய்ம்ஸ் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு பயிற்சி மருத்துவராக பெண் மருத்துவர் ஒருவர் பணியாற்றி வந்தார். இதே மருத்துவமனையில் நர்சிங் அலுவலராக சதீஷ்குமார் என்பவர் பணியாற்றி வந்தார். சதீஷ்குமார் பெண் பயிற்சி மருத்துவர்கள் பாலியல் ரீதியாக கடந்து சில நாட்களாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை பெண் பயிற்சி மருத்துவர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் மருத்துவமனை கண்காணிப்பாளர் சஞ்சீவ் குமார் மிட்டல் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் சதீஷ்குமார் பெண் பயிற்சி மருத்துவரிடம் பாலியல் ரீதியில் தொல்லைத் தந்தது உறுதியானது. இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அவரை பணியில் அமர்த்திய நர்சிங் மேற்பார்வையாளர் சினோஜ் என்பவரையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது. இருப்பினும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பிரச்சினை இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே சதீஷ்குமாரை உத்தராகண்ட் போலீஸார் கைது செய்து தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைது நடவடிக்கையின் போது போலீஸார் மேற்கொண்ட நடவடிக்கை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சதீஷ்குமார் அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதை அறிந்து கொண்ட போலீஸார் அவரை கைது செய்வதற்காக போலீஸ் வாகனத்தை மருத்துவமனை கட்டிடத்திற்கு உள்ளேயே ஓட்டி வந்துள்ளனர். அங்கிருந்த நோயாளிகளின் படுக்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு, போலீஸ் வாகனத்தை உள்ளே ஓட்டி வந்துள்ளனர். பின்னர் சதீஷ்குமாரை அவர்கள் கைது செய்து அழைத்துச் செல்லும் போது, ஏராளமான பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அந்த வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது போலீஸார் மருத்துவமனை வளாகத்திற்குள் வாகனத்தை ஓட்டி வரும் காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.