தமிழ் திரையுலகில் ‘சசிகலா புரொடக்சன்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் துவக்கப்பட்டிருக்கிறது. ஒரு படத்தை உருவாக்குவதற்கான அனைத்து வசதிளையும் கொண்ட இந்நிறுவனம் சென்னையில் உள்ளஏவி.எம். அரங்கினுள் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் முதல் படைப்புகளாக ஆண்ட்ரியாவின் நடிப்பில் ‘கா’, கிஷோர் நடிப்பில் ‘ட்ராமா’ மற்றும் புதுமுகங்கள் இணைந்து உருவாக்கியுள்ள ‘லாகின்’ ஆகிய படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது
இந்த மூன்று படைப்புகளின் டிரெய்லர் வெளியீட்டு விழாவும், இந்நிறுனத்தின் துவக்க விழாவும்
சென்னையில் நடைபெற்றது
இவ்விழாவினில் சசிகலா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சலீம் பேசும்போது,
“இங்கு எங்களை வாழ்த்த வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்நிறுவனத்தை புதிய நல்ல படைப்புகளை உருவாக்கும் எண்ணத்தில் உருவாக்கியுள்ளோம். படைப்புகளை பற்றி குழுவினர் கூறுவார்கள். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்றார்.
‘கா’ பட இயக்குநர் நாஞ்சில் பேசும்போது,
“இந்தப் படம் ஒரு ஹைபர்லிங் கதை. ஒரு காட்டில் 24 மணி நேரத்தில் நடக்கும் சம்பவங்கள்தான் படம். இந்தப் படத்திற்கு நடிகர் சலீம் கௌஷ் மிகப் பெரும் உதவியாக இருந்தார். அவர் இப்போது இல்லாதது பெரிய வருத்தம். எனக்கு வாய்ப்பளித்த ஜான் மேக்ஸ் அவர்களுக்கும், படத்தை வெளியிடும் ஆண்டனி தாஸ் அவர்களுக்கும் நன்றி..” என்றார்.
‘கா’ படத்தின் இசையமைப்பாளரான சுந்தர் சி.பாபு பேசும்போது,
“ரொம்பவும் சென்ஸிடிவான கதை இது. இந்தப் படத்தில் பாடல்கள் இல்லை. பின்னணி இசைதான். நான்தான் இசையமைக்க வேண்டும் என்றார்கள். நான் சில காலமாக இசையமைக்கவில்லை. லாக்டவுன் வந்ததால் இதில் நிறைய உழைக்க முடிந்தது.
மொத்தப் படத்திலேயே 3 பக்கங்கள்தான் வசனம் வரும். கமல் சாரின் பேசும் படத்திற்கு பிறகு நிறைய காட்சிகள் மௌனமாக இருக்கும் படம் இது. என் முழு உழைப்பை இந்தப் படத்தில் தந்துள்ளேன். ஜான் மேக்ஸ் இதனை முழு அர்ப்பணிப்புடன் எடுத்தார். அவரின் எண்ணத்திற்கு பலனாக ஆண்டனி தாஸ் வந்துள்ளார். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியை பெறும்…” என்றார்.
தயாரிப்பாளர் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ T.சிவா பேசும்போது,
“திடீரென என்னை இந்த விழாவிற்கு அழைத்தார்கள். “மூன்று சின்ன படங்களை ஒருத்தர் வாங்குகிறார்” என்றார்கள். “கண்டிப்பாக வருகிறேன்” என்றேன்.இப்போதுதான் சின்ன படங்கள் என்று பலவற்றை ஒதுக்குகிறார்கள். பெரிய படங்கள் இந்த காலத்தில் பிரேக் ஈவன் என்றுதான் போய்க் கொண்டுள்ளது. திட்டமிட்டு செய்தால் சின்னப் படங்கள் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும்.
‘ட்ராமா’ படத்தின் இயக்குநர் அர்ஜூன் திருமலா பேசும்போது,
“தமிழில் இது எனது முதல் படம். இது சிங்கிள் ஷாட் படம். எல்லாப் படமும் எடுப்பது மிகவும் கஷ்டம்தான். ஆனால் இது சிங்கிள் ஷாட் என்பதால் இன்னும் கொஞ்சம் கஷ்டம் அதிகமாக இருந்தது.இது ஒரு கமர்ஷியல் படம். சிங்கிள் ஷாட்டில் மூன்று பாடல்கள், ஃபிளாஷ்பேக், என அனைத்து கமர்சியல் அம்சங்களும் உள்ளது என்றார்
‘ட்ராமா’ பட நடிகையான காவ்யா வெல்லு பேசும்போது,
“இது எனது முதல் படம். இந்தப் படத்தின் மூலம் தமிழ் கற்றுக் கொண்டேன். இது ஒரு சிங்கிள் ஷாட் மூவி என்பதால் பிராம்ப்டிங் அஸிஸ்டெண்ட் இருக்க மாட்டார்கள். ரீடேக் போக முடியாது. ஆனால், நிறைய கற்றுக் கொண்டேன். மதுரை பெண்ணாக நடித்திருக்கிறேன். உங்களுக்கு பிடிக்குமென நம்புகிறேன் என்றார்
‘லாகின்’ திரைப்பட இயக்குநர் ராஜேஷ் வீரமணி பேசும்போது,
“எங்கள் தயாரிப்பாளர் ஜே.கே. மற்றும் சசிகலா புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கு நன்றி. 2 மணி நேரம் உங்களை சுவாரஸ்யப்படுத்தும் ஒரு கதையை உண்மையாக அர்ப்பணிப்புடன் சொல்லியுள்ளோம்..” என்றார்.
நடிகர் வினோத் கிஷன் பேசும்போது,
“லாகின் லாக் டவுன் முடிந்து ஷீட் போன படம். நாம் தெரியாமல் செய்யும் சின்ன தப்பு எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை விளக்குவதுதான் இந்தப் படம் மிக சுவாரஸ்யமாக இருக்கும். இப்படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் ஜே.கே. மற்றும் வெளியிடும் சசிகலா புரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கும் பெரிய நன்றிகள்..” என்றார்.
தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் பேசும்போது,
“சினிமாவில் சின்னப் படம், பெரிய படம் என பிரிக்க தேவையில்லை. ரிலீஸுக்கு பின்புதான் ஒரு படம் சின்னப் படமா, பெரிய படமா என தெரியும். ‘மைனா’ படம் ரிலீஸான பிறகுதான் பெரிய படமாக மாறியது. எப்போதும் வெற்றிக்கு பிறகுதான் அதை முடிவு செய்ய வேண்டும். ‘கா’ படம் மிக நன்றாக இருக்கிறது. ஆண்டனி தாஸ் இந்தப் படங்களை பார்த்து வாங்கியிருக்கிறார். அவருக்கு இந்தப் படங்கள் பெரிய லாபத்தை தரும்.” என்றார்.
சசிகலா புரொடக்சன்ஸ் சார்பில் ஆண்டனி தாஸ் பேசும்போது,
“எங்களது சசிகலா புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பல தமிழ்ப் படங்களுக்கு நாங்கள் போஸ்ட் புரொடக்சன்ஸ் செய்து வருகிறோம். நான் பல படங்களை பார்த்து வருகிறேன்.
தமிழ் சினிமாவில் பலர், நம் படத்தை வாங்குவார்களா? நாம் ஜெயிப்போமா? என கனவுகளோடு இருக்கிறார்கள். சசிகலா புரொடக்சன்ஸ் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். 2 மணி நேரம் ரசிகனை மகிழ்விக்கும் அனைத்து படமும் பெரிய படம்தான்.
எங்கள் நிறுவனம் மூலம் நல்ல படைப்புகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு அளிப்போம். இந்த மூன்று படங்களை எப்படி வெற்றி படமாக மாற்ற வேண்டும் என்ற ரகசியம் தெரியும். இந்தப் படங்கள் கண்டிப்பாக வெற்றியை பெறும். இப்படங்களுக்கு பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தர வேண்டும்..” என்று கேட்டுக் கொண்டார்.