இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசு தலைவராக ஜெதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டு, சில நாட்களுக்கு முன்பு தான் இருவரின் பதவியேற்பு விழாவும் நடைபெற்றது. இவர்களின் பதவியேற்பு விழாவிற்கு பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இதில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் 1 நாள் பயணமாக இன்று தலைநகர் டெல்லி சென்று குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவரை இன்று காலை நேரில் சந்தித்தார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் பதவி ஏற்பு விழாவிற்கு என்னால் வர முடியாத ஒரு சூழ்நிலை; அழைப்பு வந்திருந்தது; ஆனால் நான் பங்கேற்க முடியாத ஒரு சூழல். அதனால் இன்றைக்கு நான் நேரடியாக நேரம் கேட்டு அவர்களை போய் சந்தித்து என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டேன். இரண்டு பேருமே என்னிடத்தில் மகிழ்ச்சியாக பேசினார்கள். தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலைகள், ஆட்சியின் சிறப்புகள் பற்றி எல்லாம் என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார்கள். எனவே இந்த சந்திப்பு ஒரு மன நிறைவாக இருந்தது என தெரிவித்தார்.