• Thu. Apr 25th, 2024

தமிழகத்தை சேர்ந்தவர் துபாயில் சுட்டுக்கொலை

ByA.Tamilselvan

Sep 13, 2022

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் தாலுகா லெட்சுமாங்குடியில் வசித்து வரும் ராஜப்பா என்பவரின் ஒரே மகன் முத்துக்குமரன் (42). இவருக்கு, வித்யா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இதில், மூத்த மகன் 12-ம் வகுப்பும், இளைய மகன் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், கூத்தாநல்லூர் பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்த முத்துக்குமரன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லலாம் என திட்டமிட்டுள்ளார். அதன்படி, இந்த மாதம் 3- தேதி குவைத் நாட்டிற்கு சென்றிருக்கிறார்.
அங்கு சென்ற பிறகு தனது மனைவி, தாய், தந்தை, பிள்ளைகளோடு இரண்டு முறை தான் பேசியுள்ளார். அப்போது அவர், “கிளீனிங் வேலை என்று சொல்லிவிட்டு பாலைவனத்தில் ஒட்டகங்கள் மேய்க்க விட்டுள்ளனர்” எனக் கூறி புலம்பியுள்ளார்.
அதன் பிறகு ஏஜெண்டிடம் பேசி, “என்னை, என் நாட்டிற்கு அனுப்புங்கள்” எனக் கூறியிருக்கிறார். அதற்கு அந்த ஏஜென்ட், ‘குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் பேசி ஏற்பாடு செய்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு, குவைத் நாட்டில் வேலை செய்யும், முத்துக்குமரன் தெருவில் வசிக்கக்கூடிய பரக்கத் அலி என்பவரிடம் பேசியுள்ளார். அவரிடமும், அங்கு நடைபெற்ற கொடுமைகள் குறித்து முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி பரக்கத் அலியிடம் முத்துக்குமரன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென அவருடைய தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பரக்கத் அலி பலமுறை முயன்றும், முத்துக்குமரனின் தொலைபேசி செயல்படவில்லை.
இதனிடையே, அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என குவைத் நாட்டில் உள்ள செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதன் பிறகு, கடந்த 9-ம் தேதி மாலை முத்துக்குமரன் வீட்டிற்கு போன் செய்த அந்த ஏஜென்ட், முத்துக்குமரன் இறந்து விட்டதாக கூறியுள்ளார்.
வெளிநாட்டு வேலைக்குச் சென்ற முத்துக்குமரன் 5 நாட்களிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *