
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில், இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி – ஸ்ரீவிசாலாட்சி அம்மாள் எழுந்தருளியுள்ள சிவன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. எனவே மூலவர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் புனரமைப்பு பணிகள் நடந்து வருவதால், அனைத்து சன்னதிகளிலும் உள்ள சுவாமிகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இன்று ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு காலையில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன. பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் வளாகப் பகுதியில், முன்னோர்கள் நினைவாக ஏராளமான பக்தர்கள் நெய் விளக்குகள் ஏற்றி சிறப்பு வழிபாடுகள் செய்தனர். தொடர்ந்து ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடைபெற்று வருகின்றன.
