கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரே பதிவு எண்ணைக் கொண்ட இரண்டு இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் நின்று பேசும் அதிர்ச்சி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் இளைஞர்கள் சிலர் தங்களது நண்பர்களுடன் இருசக்கர வாகனங்களில் நின்று பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த இரு வேறு மாடல் இருசக்கர வாகனங்களில், ‘TN 21 C 2697’ என்ற ஒரே பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.

ஒரே பதிவு எண்ணை இரண்டு வெவ்வேறான பைக்குகளில் பயன்படுத்தி இளைஞர்கள் நின்று பேசுவதைக் கண்ட அப்பகுதி நபர் ஒருவர், அதனைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவிட்டு இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.
“இரண்டு பைக்குகள்… ஒரே நம்பர்!” என்ற தலைப்பில் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்களும் கோவை பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
ஒரே பதிவு எண்ணை இரண்டு வாகனங்களுக்குப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். திருடப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவதற்காக அல்லது குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதற்காகப் போலி நம்பர் பிளேட்டுகள் (Fake Number Plates) தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறதா என்ற கோணத்தில் கோவை மாநகரப் போக்குவரத்துப் போலீஸாரும், சட்டம் ஒழுங்கு போலீஸாரும் உடனடியாகச் சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறிந்து விசாரணை நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.




