கோவை அரசு மருத்துவமனை எதிரே காலில் காயத்துடன் உதவி கேட்டு வந்த வயதான யாசகரை கடைக்காரர் ஒருவர் எட்டி உதைத்துத் தண்ணீர் ஊற்றிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவரை மீட்டுச் சிகிச்சையளிக்கச் சென்ற தன்னார்வலர்களுக்குச் சோகமே மிஞ்சியது. அந்த முதியவர் அரசு மருத்துவமனை முன்பு பரிதாபமாக உயிரிழந்தார்.

கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்ற முதியவர், வறுமையின் காரணமாகச் சாலையோரங்களில் யாசகம் எடுத்துப் பிழைப்பு நடத்தி வந்து உள்ளார்.
இந்நிலையில், காலில் ஏற்பட்ட பலத்த காயத்துடனும் பசியோடும் கோவை அரசு மருத்துவமனை எதிரே உள்ள நடைபாதைப் பகுதிக்கு வந்து, அங்கு இருந்தவர்களிடம் கையேந்தி உதவி கேட்டு உள்ளார்.

அப்போது அங்கு உள்ள கடை ஒன்றில் இருந்த நபர், காயத்துடன் உதவி கேட்ட முதியவரிடம் சற்றும் மனிதநேயமின்றி நடந்து கொண்டு உள்ளார்.
முதியவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியதுடன், அவரைத் தனது காலால் எட்டி உதைத்து, அவர் மீது இரக்கமின்றி தண்ணீரையும் ஊற்றி அங்கு இருந்து விரட்டி அடித்து உள்ளார்.
இந்த மனிதாபிமானமற்ற கொடூரத் தாக்குதல் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சிலர், அம்முதியவரை மீட்டு உரிய மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்காக இன்று மாலை கோவை அரசு மருத்துவமனை வளாகப் பகுதிக்குச் சென்று அவரைத் தேடினர். ஆனால், அதற்கு உள்ளாகவே அந்த முதியவர் சிகிச்சை ஏதுமின்றி மருத்துவமனை வளாகத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து இருந்தது தெரியவந்தது.




