

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலைஅடிவார பகுதியில் அனவன் குடியிருப்பு என்ற கிராமம் உள்ளது. மலை அடிவாரத்தில் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் வாழை, கரும்பு மற்றும் தென்னை போன்றவற்றை பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குட்டியுடன் கூட்டமாக வந்த காட்டு யானைகள் கூட்டம் அப்பகுதியில் முருகன் என்பவர் வயலில் பயிரிடப்பட்டிருந்த கரும்புகள் அனைத்தையும் தின்றுள்ளன. மேலும் அவற்றை மிதித்து சேதப்படுத்தி தரைமட்டமாக்கியும் உள்ளன. இதேபோல் கரைப்பகுதியில் இருந்த பனை மரங்களையும் சாய்த்து அவற்றையும் சேதப்படுத்தி உள்ளது.
இது குறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் கூறுகையில், குட்டியுடன் யானைகள் கூட்டம் கடந்த சில நாட்களாக இப்பகுதியிலுள்ள பனை மரங்களை சாய்த்து வந்தது. இந்த நிலையில் நேற்றிரவு எங்கள் பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் பொங்கல் பண்டிகையை ஒட்டி அறுவடை செய்வதற்காக பயிரிடப்பட்டிருந்த அனைத்து கரும்புகளையும் தின்று தரைமட்டமாக்கியுள்ளது. அதனால் அவருக்கு சுமார் 60 ஆயிரம் நஷ்டம் ஏற்ப்பட்டு இருக்கும். இதற்கு வனத்துறையினரும் அரசும் உரிய நடவடிக்கை எடுத்துதர வேண்டும் என்றனர்.
