தேனியில் பூ வியாபாரி ஒருவருக்கு ரூ.7.46 லட்சம் மின்கட்டணம் செலுத்த வேண்டும் என்று செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். தவறு சரி செய்யப்படும் என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் பூக்கடை நடத்தி வருபவர் முருகேசன். இவருக்கு சொந்தமான பூர்வீக வீடு குல்லிசெட்டிபட்டி ஊராட்சி லட்சுமிபுரத்தில் உள்ளது. இந்நிலையில் லட்சுமிபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு மின் இணைப்பு கட்டணமாக ரூபாய் 7 லட்சத்து 46 ஆயிரம் கட்ட வேண்டும் என அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் முருகேசன் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் ரூ.120 முதல் 150 வரை மட்டுமே மின் கட்டணம் செலுத்தி வந்த முருகேசனுக்கு ரூபாய் 7 லட்சத்து 46 ஆயிரம் கட்ட வேண்டும் என குறுஞ்செய்தி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான செய்தி வைரலாக பரவி அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ராமராஜபுரம் மின் பகிர்மான கழக அலுவலகத்தில் முருகேசன் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், ரீடிங் எடுத்து ஆன்லைனில் பதிவிடும்போது ஏற்பட்டுள்ள கவன குறைவு காரணமாக 65 ஆயிரம் யூனிட் மின்சாரம் கூடுதலாக ரீடிங் காட்டப்பட்டு இந்த தொகை குறுஞ்செய்தியாக வெளிவந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், “தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட ரீடிங் நீக்கம் செய்யப்பட்டு வீட்டில் உள்ள மீட்டரில் காட்டப்பட்ட யூனிட்டின் அளவு மின் கட்டணமே நடைமுறைக்கு வரும்” என தெரிவித்தனர்.
ரீடிங் பதிவு செய்தவர் ஒரு நம்பரை சேர்த்து அடித்ததன் விளைவாக குடியிருக்கும் வீட்டுக்கு மின் கட்டணமாக பல லட்சம் செலுத்த வேண்டும் என வந்த குறுஞ்செய்தி அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தேனியில் மின்கட்டண பில்லை பார்த்து அதிர்ச்சியான பூ வியாபாரி
