கோவை வ உ சி மைதானத்தில் தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா, “பெரியார் அறிவுலகம்” கண்ட திராவிட நாயகருக்கு நன்றி பாராட்டு விழா திராவிடர் கழகம் சார்பில் நடைபெற உள்ளது.

கோவைக்கு அடையாளமாக, கோவையில் திமுக ஆட்சியில், அன்றைய மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ரூ300 கோடி மதிப்பீட்டில், கோவை காந்திபுரத்தில் 7 தளங்களை கொண்ட “பெரியார் அறிவுலக நூலகம்” பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டது. 80 சதவீத பணிகள் முடிவுற்ற நிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பிறகு தவெக ஆட்சியில் விஜய் திறந்து வைத்தார். இந்நிலையில், கோவைக்கு பெரியார் அறிவுலகம் தந்த மாண்புமிகு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு விழா கோவை வ உ சி மைதானத்தில் நாளை மாலை நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
இந்த பாராட்டு விழாவில் திக பொதுச்செயலாளர் அன்புராஜ் வரவேற்புரையாற்ற, துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரையாற்ற, திமுக மண்டல பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் துரை செந்தமிழ்ச்செல்வன், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் திக மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க உள்ளனர்.

தலைமையேற்று நன்றி பாராட்டுரை திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் வீரமணி வழங்க உள்ளார்.
சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்புரை வழங்க உள்ளார்.
திராவிடர் கழக கோவை மாவட்ட தலைவர் சந்திரசேகர் நன்றியுரையும், திமுக துணைப்பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்க உள்ளனர்.
முன்னதாக நாளை (4-11-26) காலை 10-30 மணிக்கு கோவை விமானநிலையம் வருகை தரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜி தலைமையில், விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் நீலாம்பூர் செல்லும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அங்கு, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார். இதையடுத்து, மதியம் ஓய்வெடுக்கும் திமுக தலைவர், மாலை கோவை வ உ சி மைதானத்தில் திக சார்பில் நடைபெற உள்ள பாராட்டு விழாவில் பங்கேற்க உள்ளார்.

விழாவை நிறைவு பின்பு நாளை இரவு 8-30 மணிக்கு திமுக தலைவர் விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார்.