• Mon. Apr 29th, 2024

ஜப்பானில் உதித்த விவசாய சூரியன்..!

Byadmin

Sep 29, 2021

இயற்கை உழவாண்மை என்பது உலகின் பாரம்பரியமான ஒன்று. ஆனால், காலப்போக்கில் உலகம் முழுக்கவே அது அழிக்கப்பட்டுவிட்டது. நாற்பது வருட காலத்துக்கு முன் அதை மீட்டெடுத்து உலகுக்கு மீண்டும் அறிமுகப்படுத்தியவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விவசாய ஆராய்ச்சியாளர் மசோனோபு ஃபுகோக்கா. வேளாண் பட்டம் பெற்ற அரசுத் துறையில் பணி புரிந்தவர் மசானோபு ஃபுகோக்கா. கடும் நஞ்சான டி.டி.டீ பூச்சிக்கொல்லி மருந்தை ஹெலிகாப்டர் மூலம் பயிர்களுக்கு தெளிக்கச் சொல்லி, அந்த நாட்டு அரசு உத்தரவிட்டது.


ஆனால், ~உயிர்களைக் கொல்வது புத்த தர்மத்துக்கு விரோதமானது| என்று கருதிய ஃபுகோக்கா, தான் பார்த்து வந்த அரசுப் பணியை உடனடியாக உதறிவிட்டு, தன் தந்தையின் நிலத்தில் விவசாயம் மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சியில் இறங்கினார். அவரது ஆராய்ச்சி முடிவுகள் இரு புத்தகங்களாக வெளிவந்துள்ளன. ~ஒற்றை வைக்கோல் புரட்சி|, இயற்கை வழி வேளாண்மை| என்கிற இரண்டு புத்தகங்களும் விவசாயம் குறித்த அதிர்ச்சிகரமான கேள்விகளை எழுப்பிப் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தன.


நவீன விவசாயத்தில் நாளுக்கு நாள் மண் வளம் குறைந்து கொண்டே போகிறது; வேலையும் பணச் செலவும் கூடிக்கொண்டே போகிறது. இதற்கு மாறாக ஃபுகோக்காவின் இயற்கை உழவாண்மையில் நில வளம் உயர்ந்து கொண்டே போகிறது. வேலையும் பணச் செலவும் குறைந்து கொண்டே போகிறது. இது எப்படி சாத்தியம்? ~இயற்கைக்கே திருப்பியளிப்போம்| என்னும் விதிதான் அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது. ஃபுகோக்கா அறுவடைக்குப் பின்பு வைக்கோலை நிலத்துக்கே திருப்பிக் கொடுத்தார். அதனால் ஆண்டுதோறும் நிலவளமும் உயர்ந்தது; விளைச்சலும் அதிகரித்தது. இனி, ஃபுகோக்காவின் ஆராய்ச்சி பற்றி அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம்.


~பூமியின் இயற்கை வளம் குறித்து உங்களுக்குப் புரிதல் வர வேண்டுமா? மனிதனின் கால் படாத காட்டுப் பகுதிக்குள் சென்று பாருங்கள். அங்குள்ள மரக்கூட்டங்களுக்கு யாரும் ரசாயன உரம் போடவில்லை, பூச்சிக்கொல்லி நஞ்சு தெளிக்கவில்லை. நிலத்தை உழாமல் முதல் முறையாக நெல் பயிர் செய்து அறுவடை செய்தபோது, அமெரிக்காவை கண்டுபிடித்த சமயத்தில் கொலம்பஸ் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தாரோ… அந்த அளவுக்கு நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஜப்பான் நாட்டிலேயே எனது வயல் ஒன்று தான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உழப்படாமல் இருந்து வருகிறது.


நிலத்தில் ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லி நஞ்சுகளும் பயன்படுத்தப் படாவிட்டால், இப்போது கிடைக்கும் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு குறையலாம். ஆனால், இயற்கையின் சக்தி நமக்கு அப்பாற்பட்டது. முதற்கட்ட இழப்புக்குப் பிறகு, விளைச்சல் அதிகரிக்கத் துவங்கி விரைவிலேயே முதலில் எடுத்த விளைச்சலை மிஞ்சிவிடும்.


கால் ஏக்கர் நிலத்தில் பல லட்சம் சிலந்திகள் வாழ்கின்றன. அவை பல ஆயிரம் மீட்டர் நீளமுள்ள வலைகளைப் பின்னுகின்றன. பயிரை அழிக்கும் தாய்ப் பூச்சிகள், சிலந்தியின் வலையில் சிக்குவதால் பயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. ஆனால், ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படும்போது சிலந்தி வலைகள் நொடியில் அழிக்கப்படுகின்றன.


நெல் அறுவடைக்குப் பின்பு வைக்கோல், உமி ஆகியவற்றை நிலத்தில் பரப்பினேன். முதல் பயிர் அறுவடைக்கு முன்பாகவே களிமண் பூசிய விதைகளை அந்த நிலத்தில் விதைத்து விடுகிறேன், அறுவடைக்குப் பின்பு வைக்கோலால் நிலத்தை மூடும் போது, இளம் பயிர் செழித்து வளர்கிறது. களைகளும் போட்டி போடுவது இல்லை. நான் கொஞ்சம் நெருக்கமாகவே விதைப்பேன். ஒரு சதுர அடியில் 250 முதல் 300 நெல்மணிகள் வரை உள்ள கதிர்கள் விளைகின்றன.


இப்படியெல்லாம் பேசுகிற ஃபுகோக்காவின் சிந்தனையில் தத்துவம் சிறப்பான இடத்தைப் பற்றிக் கொள்கிறது என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ~உழவாண்மையில் இயந்திரப் பயன்பாடு குறைய வேண்டும். பொருளாசையைக் கட்டுப்படுத்த வேண்டும். இப்படிச் செயல்பட்டால், வேலை சுகமாக இருக்கும். ஆத்ம ஆனந்தம் அதிகரிக்கும்| என்பதே அவருடைய அடிப்படை தத்துவம்.


மருத்துவர்கள், நோயாளிகளை கவனித்துக் கொள்கிறார்கள். இயற்கை ஆரோக்கியமானவர்களை கவனித்துக் கொள்கிறது. இயற்கைச் சூழலில், நோய் அண்டாது வாழ்வதே சிறந்த வாழ்க்கை

செய்தியாளர்: வளவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *