• Thu. Apr 25th, 2024

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளை அதிகரிக்கப்படுமா கோரிக்கை விடுக்கும் தென்மாவட்ட மக்கள்..

Byadmin

Sep 29, 2021

கன்னியாகுமரியிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மாவட்டத்திலிருந்து இயக்கப்படும் ரயில்களில் முக்கிய மதிப்புமிக்க நம்பகமான சூப்பாபாஸ்டு ரயில் வண்டி. இந்த ரயிலில் நாகர்கோவிலிருந்து தினசரி சராசரியாக 800 முதல் 1000 பயணிகள் பயணம் செய்கின்றனர். நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு ஆண்டுக்கு வரும் 60 கோடி வருவாயில் அதிக வருவாய் இந்த ரயில் மூலம் கிடைத்து வருகிறது.


கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் எப்படி உருவானது என்ற வரலாற்றை சிறது புரட்டிப் பார்ப்போமா!
திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்து தமிழ் மொழி பேசும் மக்கள் உள்ள பகுதிகளை பிரித்து புதிய கன்னியாகுமரி மாவட்டம் உதயமாகி 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தாய் தமிழகத்துடன் இணைந்தது.

தாய் தமிழகத்துடன் இணைந்தாலும் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு நேரடி ரயில் வசதி இல்லாமல் திருநெல்வேலிக்கு பேருந்துகளில் சென்று அங்கிருந்து சென்னை செல்லும் ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. பின்னர் நீண்ட காலத்திற்கு பிறகு கன்னியாகுமரியிலிருந்து தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு 1994-ம் ஆண்டு நேரடியாக ரயில் மூலம் இணைக்கப்பட்ட அந்த ரயில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் இயக்கப்பட்டது. இந்த ரயில் ஆரம்ப காலகட்டங்களில் சென்னை எழும்பூர் மார்க்கம் மீட்டர் கேஜ் இருந்த காரணத்தால் ஈரோடு சேலம், காட்பாடி வழியாக சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்பட்டது. பின்னர் சென்னை எழும்பூர் – திருச்சி –மதுரை மார்க்கம் அகலபாதையதாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு சென்னை மதுரை, திருச்சி வழியாக எழும்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டது.


கன்னியாகுமரி முதல் விருதுநகர் வரை உள்ள பகுதி மக்களுக்கு சென்னை செல்ல தினசரி ரயிலாக முதலில் சென்னை சென்று சேரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் தான் முதல் தேர்வாக உள்ளது. இதனால் மற்ற ரயில்களை காட்டிலும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கூட்டம் அலைமோதுகிறது. தென்மாவட்ட பயணிகள் தங்கள் மாநிலத்தின் தலைநகரான சென்னைக்கு பல்வேறு அலுவல் பணிகள் நிமித்தம் தினசரி செல்கின்றனர். இதிலும் குறிப்பாக வேலைவாய்ப்பு நேர்காணல், உயர்கல்விக்காக கலந்தாய்வு, வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு உயர்கல்விக்கான நுழைவு தேர்வு எழுத செல்லும் பயணிகள் இந்த ரயிலில் முன்பதிவு செய்கின்றனர்.


கடந்த 2010ம் ஆண்டு வாக்கில் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் நடைமேடைகள் நீளம் அதிகரிக்கப்பட்ட பிறகு இந்த ரயிலின் பெட்டிகளின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்து பல ஆண்டுகளாகவே இவ்வாறு 23 பெட்டிகளுடன் ஒருசில நாட்களில் அதிகபட்சமாக 24 பெட்டிகளுடன் இயக்கப்பட்டது. பின்னர் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரயிலின் பெட்டிகள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எல்.எச்.பி., பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டது. இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட பிறகு இந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளின் எண்ணிக்கை 23-லிருந்து 21 ஆக குறைக்கப்பட்டது.


இவ்வாறு குறைக்கப்பட்டாலும் இருக்கைகளின் எண்ணிக்கையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை. ஏனென்றால் பழைய ஐசிஎப் இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகளில் ஒரு பெட்டியில் 72 இருக்கைகள் வீதம் மொத்தம் உள்ள 11 சீலிப்பர் பெட்டிகளில் 792 இருக்கைகள் மட்டுமே உண்டு. ஆனால் இந்த எல்.எச்.பி இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகளில் ஒரு பெட்டியில் 80 இருக்கைகள் வீதம் பத்து பெட்டிகளில் 800 இருக்கைகள் கிடைத்து. இதனால் மூன்று பெட்டிகள் குறைக்கப்பட்டாலும் இருக்கைகளில் பெரிய அளவில் இழப்பு ஏதுமின்றி இந்த ரயில் இயங்கி வந்தது.


தற்போது இந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளின் எண்ணிக்கைகயை 21லிருந்து 20 ஆக குறைத்து அதிலும் குறிப்பாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட சீலிப்பர் வகுப்பின் பெட்டிகளின் எண்ணிக்கைகயை 10லிருந்து 9-ஆக ரயில்வேத்துறை குறைத்துள்ளது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்னை செல்லும் பயணிகளின் எண்ணிக்கையில் தினசரி 80 நபர்கள் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் தினசரி அதிக அளவில் பயணிகள் முன்பதிவு இருக்கை கிடைக்காமல் குறிப்பாக ஆர்ஏசி பயணிகள் படுக்கை வசதி கிடைக்காமல் இருந்து கொண்டே பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் காத்திருப்போர் பட்டியல் உள்ள பயணிகள் ஒருவருக்கு கூட இருக்கைகள் கிடைப்பது இல்லை;. நாகர்கோவில் – தாம்பரம் ரயில்:
நாகர்கோவிலிருந்து தாம்பரத்துக்கு வாரத்துக்கு மூன்று நாட்கள் அதாவது திங்கள், செவ்வாய், வியாழன் போன்ற நாட்களிலும், வெள்ளிகிழமை சென்னை எழும்பூர் வாராந்திர ரயில் என மொத்தம் நான்கு நாட்கள் சென்னைக்கு ரயில்கள் இயங்குகின்ற நாட்களிலும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் காத்திருப்போர் பட்டியலுடனே இயங்கி வருகின்றது.

இந்த நாகர்கோவில் – தாம்பரம் ரயில் இல்லாத ஞாயிற்றுகிழமை, புதன், சனி ஆகிய நாட்களில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிக நெருக்கடி ஏற்பட்டு அதிக அளவில் பயணிகள் முன்பதிவு இருக்கை கிடைக்காமல் ஆர்ஏசி இருக்கைகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஆகவே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளின் எண்ணிக்கையை குறிப்பாக சீலிப்பர் பெட்டிகளின் அதிகரித்து இயக்க வேண்டும்.

இந்த பிரச்சனையில் உடனடியாக கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி தொகுதி எம்.பிக்கள் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அவர்களை தொடர்பு கொண்டு பெட்டிகளின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த பகுதி பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர்: வளவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *