• Fri. Apr 19th, 2024

மயான தொழில் செய்யும் முதுநிலை பட்டதாரி, உதவிக்கரம் நீட்டுமா தமிழக அரசு?

கொரோனா பலருடைய வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிவிட்டது. பலர் உறவுகளை இழந்து, வேலையை இழந்து, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வாழ்க்கையே தொலைத்துவிட்டனர். அப்படிபட்ட ஒருவர் தான் சங்கர்.

மானாமதுரை இரயில்வே காலனியில் வசித்து வரும் கருத்தகாளை என்னும் முருகேசன் மற்றும் பஞ்சவர்ணம் தம்பதியினர் கடந்த 30 வருடங்களுக்கு மேல் மயான தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர் . குடும்ப வறுமையின் காரணமாக 4 குழந்தைகளும் படிக்காமல் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். நால்வருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் கடைசியாக பிறந்த மகன் மு.சங்கர். படிக்கும் காலம் தொட்டு பல சிரமங்களை சந்தித்து வரும் இவர், ஆரம்பம் முதலே தந்தைக்கு உதவியாக மயான தொழிலுக்கு சென்றுகொண்டே எம்.எஸ்.சி பட்ட படிப்பு முடித்துள்ளார்.

மேலும் சிவகங்கை மாவட்டத்திலேயே ஓவிய கலையின் வாயுலாகவும், கலை நிகழ்ச்சிகள் வாயுலாகவும் பல விருதுகளையும் பாராட்டு சான்றிதழ்களையும் வாங்கிக் குவித்துள்ளார். அதேவேளையில் திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் வாழ்ந்துவரும் சூழலில் ஒரு தனியார் பள்ளியில் தற்காலிக ஓவிய ஆசிரியர் பணியில் பணிபுரிந்து வந்தார்.

கொரோனா காலத்தில் பலர் தங்களது வாழ்வாதாரத்தை தவித்தனர். அதில் ஷங்கர் மட்டும் விதிவிலக்கில்லை. கொரோனா நோய் பரவல் காலத்தில் கிடைத்த ஆசிரியர் வேலையும் பறிபோனது. தான் படித்த படிப்பிற்கு தகுந்த வேலையை பல முறை பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் குடும்பத்தை காக்க தந்தையுடன் இணைந்து மயான வேலையை செய்து வருகிறார். கொரோன காலத்தில்

இவருக்கு சென்னை சர்வதேச தமிழ் பல்கலை டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. இது குறித்து சங்கரின் பெற்றோர் கூறுகையில், முதல் பட்டதாரியான சங்கர் மயானத்திற்கு வரும் வறுமை நிலையில் உள்ளவர்களிடம் கட்டணம் வாங்காமல் எரியூட்டும் பணிகளை செய்வார்.
எங்களுக்கு வயதாகி விட்டதால் அவரே மயானத்தில் அனைத்து வேலைகளையும் செய்கிறார். அவரது சேவையை பாராட்டி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அரசு எனது மகனின் படிப்பிற்கேற்ற வேலை வழங்கினால் எங்களது குடும்பத்திற்கு உதவியாக இருப்பார்” என்றனர்.

குடும்பத்தின் முதல் பட்டதாரி மாணவரான இவர் தற்பொழுது மயான தொழில் செய்து கொண்டே பல உதவிகளையும், சாதனைகள் படைத்து வருகிறார். தான் கற்ற கல்வியும், வாங்கிய விருதுகளும், பெற்ற பட்டங்களும் மயான கொட்டகை வாழ்க்கையிலேயே மாய்ந்து போகுமோ…? என்ற மனக்குமுறலுக்கு மருந்தாகவும்… இவரின் குடும்ப வறுமையை போக்கவும்… கற்ற கல்விக்கு கருணை அடிப்படையில் உதவிக்கரம் நீட்டுமா தமிழ்நாடு அரசு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *