• Mon. Apr 29th, 2024

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்

Byகுமார்

Sep 22, 2021

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் வரும் 20 ஓவர் உலகக் கோப்பையுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதனால் இந்திய அணிக்குப் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய தயாராகிவருகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.

அந்தவகையில், ராகுல் டிராவிட்டிடம் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் தேசிய கிரிக்கெட் மையத்தின் தலைவர் பொறுப்பை தொடர விரும்பியதால், டிராவிட் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அனில் கும்ப்ளேவை மறுபடியும் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கொண்டுவரலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கும்ப்ளே பதவி வகித்தார். ஆனால், கேப்டன் கோலிக்கும் அவருக்கும் இடையே புகைந்ததால் கும்ப்ளே பதவியை இராஜினாமா செய்தார். ஆனால் தற்போது விராட் கோலி ஒருநாள் போட்டிகளுக்குக்கான கேப்டன் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், அனில் கும்ப்ளேவை மீண்டும் தலைமை பயிற்சியாளராக்கும் முயற்சியில் கிரிக்கெட் வாரியம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஒருவேளை கும்ப்ளேவும் மறுத்தால், வி.வி.எஸ். லட்சுமண் அப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, இந்திய வீரர்களை தவிர்த்து மற்ற நாட்டு வீரர்களை நியமிக்கவும் முயற்சிகள் நடைபெறுகிறது. அந்தவகையில் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மகிளா ஜெயவர்தனேவை அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் பதவியை விட்டுவர மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *