• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

குழந்தையை கொடூரமாக தாக்கிய தாயின் ’பகீர்’ வாக்குமூலம்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மணலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் வடிவழகன். இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்த துளசி என்ற பெண்ணுக்கும் 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. 3 வருடமாக, சென்னை தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு, பிரதீப் என்கிற ஒன்றரை வயது குழந்தை மற்றும் கோகுல் என்ற 3 வயது ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், 2019 காலகட்டத்தில் இவர்கள் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூர் கிராமத்திற்கு குடி வந்தனர். சில நாட்களாக வேறு ஒருவரிடம் தொடர்ந்து தொலைபேசியில் துளசி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், வடிவழகன் தனது மனைவி துளசியிடம் சண்டையிட்டுள்ளார்.

இந்நிலையில், ஒன்றரை வயதான குழந்தை பிரதீப்பை துளசி கொடுமைப்படுத்தி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து குழந்தையை தாக்கிய தாய் துளசி மீது செஞ்சி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தந்தை வடிவழகன் புகார் அளித்தார். 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், துளசியிடம் விசாரணை நடத்த ஆந்திராவுக்கு சென்றனர். இதனிடையே, தவறான நடத்தையால், துளசி தனது குழந்தையை தாக்கி வீடியோ எடுத்ததாக, குழந்தையின் தந்தை தரப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குழந்தையின் தந்தை வடிவழகன் அளித்த புகாரில் தாய் துளசியை சித்தூர் மாவட்டம் ராம்பள்ளியில் உள்ள அவருடைய தாய் வீட்டில் வைத்து போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

துளசியிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சென்னையைச் சேர்ந்த துளசியின் கள்ளக்காதலன் பிரேம்குமார் என்பவருடன் ஏற்பட்ட பிரச்னையால் தான் குழந்தையை தாக்கியதாக துளசி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, துளசியின் கள்ளக்காதலன் பிரேம்குமாரை கைது செய்ய சத்தியமங்கலம் போலீசார் ஆறு பேர் கொண்ட தனிப்படை சென்னை சென்றுள்ளது.