• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மீண்டும் கைதாகிறாரா மீரா மிதுன்?

தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் நடிகை மீரா மிதுன் அலட்சியப்படுத்தி வருகிறார் என்றும் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்த நிலையில், பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த மீரா மிதுன் சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியாக போட்டோக்களை போட்டு வந்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யாவை வம்பிழுத்து அவர்களது ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார்!

ஒரு கட்டத்தில் பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், மீரா மிதுன், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். பின்னர், நடந்த விவகாரம் குறித்து பகிரங்க மன்னிப்பு கோரிய மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. போலீசார் தரப்பு விசாரணைக்கு மீரா மிதுன் ஒத்துழைப்பு தருவதே இல்லை என தெரிவித்தனர்.

இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவரை கைது செய்து ஏப்ரல் 4ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.