திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள ஜெ.மெட்டூர் கிராமத்தைத் சேர்ந்தவர் அய்யப்பன் (43) தொழிலதிபரான இவர், தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறைகளில் புதிய சாலைகள் அமைக்கும் ஒப்பந்த பணிகளை காண்ட்ராக்ட் எடுத்து பணிகள் செய்து வருகிறார்.

இந்நிலையில், இவர் ஜெ.மெட்டூரில் உள்ள ஜம்புதுரை அம்மன் கோவில் முன்பு டீக்கடையில் டீக்கடை உரிமையாளர் இதே ஊரைச் சேர்ந்த ராஜு (32) அய்யப்பன் கணேசன் (47) பிச்சைமணி (60) முருகன் (42) மற்றும் சிலருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, இரவு நேரம் என்பதால், அருகில் உள்ள மின்சார டிரான்ஸ்பார்மை ஆப் செய்து விட்டு இரண்டு பேர் கொண்ட மர்ம நபர்கள், முகமூடி அணிந்து கோவில் முன்பு உள்ள டீக்கடை பின் வழியாக அய்யப்பன் அமர்ந்து உள்ள இடத்திற்கு வந்து, தலையில் நீண்ட வாள் மூலம் சரமாரியாக வெட்டி உள்ளனர். ரத்த வெள்ளத்தில் அவர் நிலை தடுமாறிய போது, அந்த மர்ம நபர்கள் வந்த வழியாக அருகில் உள்ள தோட்டத்துப் பகுதியில் தப்பி ஓடி விட்டனர். அந்த மர்ம நபர்களை விரட்டிச் சென்ற டீக்கடை உரிமையாளர் ராஜு என்பவரையும் வெட்ட முயற்சி செய்து விட்டுத் தப்பி ஓடி விட்டனர்.

தலையில் பலத்த காயம் அடைந்த தொழிலதிபர் அய்யப்பன் உடனடியாக தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு இளஞ்செழியன் மற்றும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் அய்யப்பன் வெட்டப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் காவல் துறையில் வழக்கு பதிவு செய்து, அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் தனிப்படை அமைத்து அய்யப்பனை வெட்டிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் இப்போதையில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ஜெ.மெட்டூர் மற்றும் ஜம்புதுரை அம்மன் கோவில் பகுதியில் பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


