• Mon. Nov 23rd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

4 அடி உயரக் கொப்பரை, 400 லிட்டர் நெய்யுடன் வழக்கமான தீப மண்டபம்…

ByKalamegam Viswanathan

Nov 23, 2026

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளது. உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே பல ஆண்டுகளாக வழக்கமாக மகா தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், தர்கா அருகே அமைந்துள்ள சர்ச்சைக்குரிய கல் தூணிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்த விவகாரத்தில் மத நம்பிக்கை, வழிபாட்டு உரிமை, வரலாறு, தொல்லியல் ஆதாரங்கள் ஆகியவை ஒருபுறம் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மற்றொரு முக்கியமான கேள்வியும் எழுந்துள்ளது.
அதாவது, மலை உச்சியில் திறந்தவெளியில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய கல் தூணில் பெரிய அளவிலான தீபம் ஏற்றுவதற்கான கட்டுமான மற்றும் பாதுகாப்பு சாத்தியக்கூறுகள் என்ன என்பதுதான் அந்தக் கேள்வி.

வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்தில் என்ன ஏற்பாடுகள்?

திருப்பரங்குன்றம் மலை மீது உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள மண்டபத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதற்காக சுமார் 4 அடி உயரம் கொண்ட தாமிரக் கொப்பரை பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் கொப்பரையின் மேற்பகுதி 2½ அடி அகலமும், அடிப்பகுதி சுமார் 1¾ அடி அகலமும் கொண்டது. இதன் எடை சுமார் 70 கிலோ.

இதில் 400 லிட்டர் நெய் நிரப்பப்பட்டு, 150 மீட்டர் நீளமுள்ள காடா துணியால் தயாரிக்கப்பட்ட திரி பயன்படுத்தப்படுகிறது. மேலும் 5 கிலோ சூடம் கொண்டு மகா தீபம் ஏற்றப்படுகிறது.

இத்தகைய பெரிய அளவிலான தீபத்தை ஏற்றுவதற்கு ஏற்ற வகையில் அங்கு ஏற்கெனவே மண்டப அமைப்பும், கொப்பரையை வைப்பதற்கான வசதியும் உள்ளன.

மற்ற மலைக்கோவில்களில் மகா தீபம் ஏற்றும் முறை

தமிழகத்தில் பல்வேறு மலைக்கோவில்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் சுமார் 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இதற்காக சுமார் 5 அடி உயரமுள்ள பெரிய கொப்பரை பயன்படுத்தப்படுகிறது. 2025-ஆம் ஆண்டு 4,500 கிலோ நெய்யும், 1,500 மீட்டர் நீளமுள்ள திரியும் மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஏறக்குறைய அதே போன்று தான் இந்த ஆண்டும் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட உள்ளது.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலிலும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. அங்கு 5 அடி உயரமுள்ள கொப்பரையில் 300 மீட்டர் நீளமுள்ள திரி பயன்படுத்தப்படுகிறது. 2020-ஆம் ஆண்டு 900 லிட்டர் எண்ணெய் மற்றும் நெய் கலவை பயன்படுத்தப்பட்டதாகவும், 2025-ஆம் ஆண்டு 700 லிட்டர் பயன்படுத்தப்பட்டதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்தக் கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் தீபம் ஏற்றுவதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சர்ச்சைக்குரிய கல் தூணின் அமைப்பு என்ன?

திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்காவுக்கு அருகில் அமைந்துள்ள கல் தூண்தான் தற்போது சர்ச்சையின் மையமாக உள்ளது.
இந்தத் தூண் சுமார் 8 அடி உயரமும், ஒரு அடி அகலமும் கொண்டதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. மேலும் இது ஒரு கிரானைட் கல்லாகும்.

இந்தக் கல் தூண் தீபம் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டதா அல்லது நில அளவீட்டுக்காக அமைக்கப்பட்ட சர்வே கல்லா என்பது தொடர்பாகவும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், அந்தத் தூணில் விளக்கேற்றுவதற்கான அமைப்பு இருப்பதாகவும், அதனை தீபத்தூணாகக் கருத வேண்டும் என்றும் ஒரு தரப்பில் வாதிடப்பட்டது.
மறுபுறம், அது சர்வே கல் என்றும், அங்கு தீபம் ஏற்றும் மரபு இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் எதிர்த்தரப்பினர் வாதிட்டனர்.

ஒரு அடி அகலமுள்ள கல்லில் 4 அடி கொப்பரையை வைக்க முடியுமா?

இங்கு எழும் முக்கியமான பொறியியல் கேள்வி இதுதான்.
வழக்கமான தீப மண்டபத்தில் பயன்படுத்தப்படும் தாமிரக் கொப்பரை 4 அடி உயரமும், 70 கிலோ எடையும் கொண்டது. அதில் 400 லிட்டர் நெய் நிரப்பப்படுகிறது.

400 லிட்டர் நெய்யின் எடை மட்டும் சுமார் 360 முதல் 370 கிலோ வரை இருக்கும்.
எனவே கொப்பரை மற்றும் நெய்யின் மொத்த எடை சுமார் 430 முதல் 440 கிலோவாக இருக்கும். இத்தகைய எடையை ஒரு அடி அகலமுள்ள கல் தூணின் மீது வைப்பதற்கு அதன் தாங்கும் திறன், நிலைத்தன்மை, கொப்பரையின் அடிப்பகுதி விட்டம் உள்ளிட்டவை கணக்கிடப்பட வேண்டும். அதேநேரத்தில், சர்ச்சைக்குரிய தூணில் வழக்கமான பெரிய கொப்பரையைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சிறிய விளக்கு அல்லது வேறு வகையான தீப அமைப்பைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் தனியாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

காற்றின் வேகம்: முக்கியமான பாதுகாப்புப் பிரச்சினை

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மேற்கு புற சரிவில் திறந்தவெளியில் உள்ள சர்ச்சைக்குரிய கல் தூணைச் சுற்றிலும் காற்றின் வேகம் மற்ற பகுதியை காட்டிலும் இங்கு அதிகம். குறிப்பாக கார்த்திகை மாதம் வடகிழக்குப் பருவமழைக் காலமாக இருப்பதால் காற்றின் வேகம், திசை, மழை மற்றும் ஈரப்பதம் ஆகியவை தீபம் ஏற்றும் நிகழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் மதுரை நிலையத் தரவுகளின்படி நவம்பர் மாத சராசரி காற்றின் வேகம் மணிக்கு 5.5 கிலோமீட்டர் என்ற அளவில் உள்ளது. இந்நிலையில் மலை உச்சியில் மேலும் அதிகமாக வீசுவதற்கு வாய்ப்பு உண்டு. அதையும் கணக்கில் கொள்ள வேண்டியது அவசியம்.

தீபம் ஏற்றியதற்கான வரலாற்று அடையாளங்கள் உள்ளனவா?

இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கியமான கேள்வி, சர்ச்சைக்குரிய கல் தூணில் இதற்கு முன்பு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளனவா என்பதுதான். அந்தத் தூணில் கரித்தடம், எண்ணெய்த் தடம் அல்லது தீபம் ஏற்றியதற்கான பிற அடையாளங்கள் உள்ளனவா என்றால் கடந்த 150 ஆண்டுகளாக அங்கு விளக்கு ஏற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடையாது என்பது இரு தரப்பும் ஒப்புக்கொள்ளும் முக்கியமான வாதம் ஆகும்.

உச்ச நீதிமன்ற உத்தரவும் தற்போதைய நிலையும்

இந்த விவகாரத்தில் நவம்பர் 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அதன்படி நவம்பர் 24-ஆம் தேதி சர்ச்சைக்குரிய கல் தூணில் இந்த ஆண்டு மட்டும் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகத்தால் தேர்வு செய்யப்படும் சிறிய குழுவினர் மட்டுமே அதிகாரிகளின் ஒருங்கிணைப்புடன் அங்கு சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர், காவல்துறை, தொல்லியல் துறை உள்ளிட்ட அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ள அனுமதியை எதிர்காலத்தில் அங்கு தீபம் ஏற்றுவதற்கான நிரந்தர உரிமையாகவோ, ஏற்கெனவே வழக்கமாக தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரமாகவோ எடுத்துக்கொள்ள முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இது மத நம்பிக்கை தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல; வரலாறு, தொல்லியல், பொறியியல் மற்றும் பொதுப் பாதுகாப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கிய விவகாரம் என்பதால், உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பின் முக்கிய நிர்வாகியும் வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் கூறுகையில், ‘உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் நில அளவை தூணை தீபத்தூண் என்று குறிப்பிட்டதையும், அக்குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய தூண் அமைந்துள்ள இடம் கோவிலுக்கு சொந்தமானது என்பதையும் உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. அதேபோன்று அக்குறிப்பிட்ட தூண் எந்த மாதிரியான தூண் என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். இதையெல்லாம் நாங்கள் முடிவு செய்யவில்லை என்றாலும் இந்த ஆண்டு மட்டும் அக்குறிப்பிட்ட தூணில் ஒருமுறை விளக்கேற்றலாம் என்று குறிப்பிட்டு இருப்பது மிகுந்த முரண்பாடாக உள்ளது’ என்றார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சர்ச்சைக்குரிய பொருள் சர்வே கல் என்பது உறுதியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள சர்வே ஆய்வறிக்கையில், தமிழகம் முழுவதும் மொத்தம் 484 சர்வே கற்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் ஒரு பகுதியாக இந்த 484 சர்வே கற்களும் கண்டறியப்பட்டுள்ளன. திருப்பரங்குன்றம் மலையில் உள்ள பொருளும் சர்வே கல் என்பதற்கான தகவல் இந்த ஆய்வறிக்கை மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள இந்தக் கல்லைச் சுற்றி கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக சர்ச்சை நீடித்து வரும் நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள சர்வே அறிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.