தேனி மாவட்டத்தில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டாஸ்மாக் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள அரசு டாஸ்மாக் குடோன் மற்றும் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பாக, நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை நுகர்வோரிடமிருந்து திரும்பப் பெறும் புதிய நடைமுறை, தங்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தும் என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், மது வாங்க வரும் நுகர்வோருடன் அடிக்கடி வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்படும் சூழல் உருவாகும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, கடைகளில் காலி பாட்டில்களைச் சேமித்து வைக்க போதிய இடவசதி இல்லை என்றும், பணியாளர் பற்றாக்குறை நிலவும் நிலையில் பாட்டில்களை ஸ்கேன் செய்து பெற்றுக்கொள்வது கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர்.
மேலும், காலி பாட்டில்களைச் சேமித்து வைப்பதால் சுகாதாரப் பிரச்சினைகள் மற்றும் நோய்த்தொற்று அபாயம் ஏற்படக்கூடும் என்றும், இதற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.
தங்களது வாழ்வாதாரக் கோரிக்கைகள் கடந்த 23 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும், நிர்வாகத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்படும் முடிவுகள் முறையாகச் செயல்படுத்தப்படுவதில்லை என்றும் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும், தங்களது நீண்டகால கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.