தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறியது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மாநிலம் முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, ஒருங்கிணைந்த தேனி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி, ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் உள்ளிட்ட வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

அப்போது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, சட்டம் – ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தத் தவறியதாகக் கூறி தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், தமிழக வெற்றிக் கழக அரசையும், முதலமைச்சர் விஜய்யையும் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
