தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் அமைந்திருக்கும் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தவெக (TVK) ஆண்டிப்பட்டி மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி, தனது ஆதரவாளர்களுடன் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி மாலை அணிவித்தனர்.

அரசியல் கட்சியினர் மற்றும் தொண்டர்கள் சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்திவிட்டுத் திரண்டதால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. இதனால் அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள், பேருந்துப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நீண்ட வரிசையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதை விட, அவசர சிகிச்சைக்குச் செல்ல வேண்டிய 108 ஆம்புலன்ஸ் வாகனம் அந்தப் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது நெஞ்சை உருக்கும் வகையில் இருந்தது. நோயாளிகளின் உயிரைக் காக்க வேண்டிய அவசர ஊர்திகள்கூட செல்ல முடியாதபடி சாலை மறிக்கப்பட்டிருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

பொதுமக்களுக்கும் அவசர கால ஊர்திகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி நிகழ்வுகளை நடத்தும் அரசியல் கட்சியினர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.