• Fri. Oct 9th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

8 மணி நேரம் தாமதத்திற்கு பின் மலைக்கு மேல் சென்ற திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வேல்..,

ByKalamegam Viswanathan

Oct 9, 2026

திருப்பரங்குன்றம் மலை மேல் வேல் எடுக்கும் விழாவுக்கு திடீரென கட்டுப்பாடுகள் விதித்து அன்னதானம் செய்ய போலீசார் தடை விதித்ததால் கிராம மக்கள் கோயில் வாசலில் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான புரட்டாசி மாதம் திருப்பரங்குன்றம் மற்றும் அதனை சுற்றியுள்ள 42 கிராம மக்கள் சார்பில் மலை மேல் வேல் எடுக்கும் விழா நடைபெறுவது வழக்கம். அந்த விழாவிற்காக மூலவர் சுப்பிரமணியசுவாமி திருக்கரத்தில் உள்ள தங்கவேல் திருப்பரங்குன்றம் மலைக்கு மேலே பல்லக்கில் காலை 9 மணியளவில் எடுத்து செல்லப்பட்டு பழனியாண்டவர் கோயில் வழியாக காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சுனைக்கு கொண்டு செல்லப்பட்டு தங்கவேலுக்கு பால் தயிர் பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று பின்னர் கிராமத்தார் சார்பில் கதம்ப சாப்பாடு தயார் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கும் விழா நடைபெறும். இந்த நடைமுறை பல நூறு ஆண்டுகளாக கிராம மக்களால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தொல்லியல் துறை சார்பில் மலை மேல் வேல் எடுக்கும் நிகழ்வில் கதம்ப சாப்பாடு செய்ய அனுமதி கிடையாது என கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்ததாகவும் . இதனைத்தொடர்ந்து கோயில் நிர்வாகம் கிராம மக்களுக்கு மலைக்கு மேலே அன்னதானம் தயார் செய்ய அனுமதி மறுத்தது. இதனால் நேற்று காலை முதல் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். பின்னர் நேற்று இரவு கோயில் அலுவலகத்தில் துணை ஆணையர், போலீசார் ஆகியோருடன் கிராம மக்கள் பேச்சுவர்த்தை நடத்தினர்.

ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத்தால் கிராம மக்கள் இன்று காலை முதல் கோயில் முன்பு திரண்டனர். இதனால் வழக்கமாக காலை 9 மணியளவில் துவங்கும் விழா இன்று 11 மணி வரை துவங்கவில்லை. இதனை கண்டித்து கிராம மக்கள் கோயில் வாசல் முன்பு கூடி தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருப்பரங்குன்றத்தில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே மாலை 3:30 மணிக்கு மேல் கோவில் நடை திறந்த பிறகு பூஜை செய்யப்பட்டு அதற்குப் பிறகு மலை மீது வேல் எடுத்துச் செல்லப்பட்டது.

மேலும் இது இரவு தான் கீழே இறங்கும் என்பதால் வழக்கத்திற்கு மாறாக இரவு நேரத்தில் வேலை கீழே இறக்குவதால் நடை ஒருவேளை சாத்தி விட்டால் என்ன செய்வது என தெரியாமல் இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். வழக்கமாக நடைபெறும் விழாவில் 8 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக மேலே வேல் எடுத்துச் சென்றதால் அசம்பாவிதம் ஏதும் நடக்குமோ என திருப்பரங்குன்றம் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே உள்ளார்கள்.