திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடைவீதியில் பெரிய பள்ளிவாசல் உள்ளது.
இந்த பள்ளிவாசலில் ஆண்டுதோறும் மிலாது நபி விழாவையொட்டி மதநல்லிணக்க கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா நடைபெற்றது.

முன்னதாக பெரிய பள்ளிவாசலில் ஜமாத் கமிட்டி சார்பில் _நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு மிலாது நபியையொட்டி அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடனும், நோய் இன்றி நலமுடன் வாழவும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும் சிறப்பு துவா ஓதப்பட்டு விழா தொடங்கியது.

விழாவில் 2,500 கிலோ அரிசியில் தயாரான கமகமக்கும் நெய்ச்சோறு தயார் செய்யப்பட்டது. பின்னர் கறி குழம்பு தால்சாவுடன் சுடச்சுட நெய் சோறு பாத்திரங்களில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய அனைத்து மத குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது.
இதனை வேடசந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வந்து வாங்கிச்சென்றனர்.

விழாவில் ஏற்பாடுகளை ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.




