• Sun. Nov 22nd, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

பெட்ரோல் பங்கில் மாற்றுத்திறனாளிப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் முயற்சி..,

ByAjmalkhan saleemraja

Nov 22, 2026

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்த மாற்றுத்திறனாளிப் பெண் ஊழியரிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக மேலாளர் மீது புகார் எழுந்துள்ளது. இதனால் பெட்ரோல் பங்கில் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை, சித்திரீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்த சித்ரா (30), தனது கணவர் வினோத்ராஜுடன் இணைந்து பெரியகுளம் – தேனி சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் கடந்த 5 ஆண்டுகளாகத் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், சம்பவத்தன்று கணவர் பணிக்கு வராததால் சித்ரா மட்டும் தனியாகப் பணியில் இருந்துள்ளார். அப்போது கழிப்பறையைச் சுத்தம் செய்வதற்காக பினாயில் எங்கே உள்ளது என மேலாளர் சையது அபுதாகீரிடம் கேட்டுள்ளார்.

பினாயில் ஜெனரேட்டர் அறையில் இருப்பதாகக் கூறி, சித்ராவை அங்கு அழைத்துச் சென்ற மேலாளர், அறையின் கதவைச் சாத்திவிட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த சித்ரா, மேலாளரைத் தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி வெளியேறியுள்ளார். பின்னர் வீட்டிற்குச் சென்று தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, உறவினர்களுடன் பெட்ரோல் பங்கிற்கு வந்த சித்ரா, அங்கிருந்த ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், நிர்வாகத் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை எனக் கூறி, உறவினர்கள் பெட்ரோல் பங்கை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மேலாளர் சையது அபுதாகீர் தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து, சக ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரைப் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, காவல்துறையினரின் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவே மேலாளர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறுவதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிப் பெண் சித்ரா, பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாற்றுத்திறனாளிப் பெண் ஊழியரிடம் பெட்ரோல் பங்க் மேலாளர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக எழுந்துள்ள இந்தப் புகார், பெரியகுளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.