திண்டுக்கல், நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வந்த FQL இன்வெஸ்ட்மெண்ட் என்ற தனியார் நிதி நிறுவனம், முதலீடு செய்யும் பணத்தை 45 முதல் 65 நாட்களில் இரட்டிப்பாக்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தின் இணையதளம் திடீரென முடங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக காசம்பட்டி பகுதியில் முகவர்களாக செயல்பட்ட ரமேஷ், அவரது மனைவி அனிதா, உறவினர் விஜய் ஆகியோரின் வீடுகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு சேதப்படுத்தினர்.

தகவலறிந்து வந்த போலீசார் மூவரையும் மீட்டு மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவிடம் ஒப்படைத்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே பகுதியைச் சேர்ந்த ராசு, தனது தலைமையில் 150-க்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூலித்து அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார். பண இழப்பு தொடர்பாக நத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த ராசு, பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இதையறிந்த உறவினர்கள், ராசுவை பணம் கட்டிய 5 நபர்கள் மிரட்டி அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாகக் குற்றம்சாட்டி, அவரது உடலை நத்தம் – மதுரை நான்கு வழிச்சாலையில் வைத்து 3 மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் உடலை மீட்க முயன்றபோது தள்ளுமுள்ளு மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறின.

நேற்று நடைபெற்ற மோதல் மற்றும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள உடற்கூறாய்வின் போது எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் தடுக்க திண்டுக்கல் நகர் டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இந்த நிலையில், ராசுவின் உடலை வாங்குவதற்காக தாய் மற்றும் உறவினர்கள் தனி வாகன மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு வந்துள்ளனர்.
தற்கொலை செய்து கொள்வதாக கூறும் ராசு-வின் தாயார் மஞ்சு கூறும்போது,
நிதி நிறுவனத்தில் எத்தனை நபர்களிடம் மகன் ராசு பணம் வாங்கிக் கொடுத்தார் என்ற விவரங்களை இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் ஒப்படைக்க உள்ளதாக கூறியிருந்த நிலையில் அவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர்கள் சிலர் திடீரென வீட்டிற்கே வந்து ராசுவை அழைத்துச் சென்றனர்.

மேலும் யார் யாரிடம் பணம் வசூல் செய்து கொடுத்தற்கான லிஸ்ட் எடுத்துச் சென்றார்.
பின்னர் சிறிது நேரத்தில் எனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் எங்களுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது காது, இடுப்பு, மர்ம பகுதி கால் என உடல் முழுவதும் ரத்த காயம் இருந்தது எனது மகன் சாவிற்கு சரியான நீதி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உடலை வாங்கிக் கொள்ள நாங்கள் முழு சம்மதம் தெரிவித்துள்ளார்.




