விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கடுகப்பட்டு ஊராட்சியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாடார்மங்கலம் அருகேயுள்ள கடுகப்பட்டு ஊராட்சியில், சிலர் தங்களது வீடுகளில் சம்ப் டேங்க் எனப்படும் நிலத்தடி தண்ணீர் தொட்டிகளை அமைத்து, தெருக் குழாய்களில் வரும் குடிநீரை அதிகளவில் சேமித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன் காரணமாக, தினசரி தெருக் குழாய்களை நம்பி வாழும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா மகேஷ் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், பொதுமக்களின் வரிப்பணம் முறையாக பயன்படுத்தப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர் நந்தவேல் குற்றம்சாட்டியுள்ளார்.

இதையடுத்து, பொதுமக்களின் ஆதரவுடன் வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜாவிடம் மனு அளித்து, சம்பந்தப்பட்டோர் மீது விசாரணை நடத்தி, குடிநீர் விநியோகம் அனைவருக்கும் சமமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவைத் தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது.




