பார்வைத்திறன் குறைபாடுடையவர்களுக்கு கணினி, டிஜிட்டல் அறிவு மற்றும் நிதி மேலாண்மை உள்ளிட்ட தொழிற்பயிற்சிகளை வழங்கும் ஐ-ஸ்மார்ட்
தொழிற்பயிற்சி மையம், கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் துபாய் டவுன்டவுன் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து, ரோட்டரி அறக்கட்டளையின் பன்னாட்டு மானியத் திட்டத்தின் கீழ் சுமார் 76,000 அமெரிக்க டாலர் மதிப்பில் இத்திட்டத்தை உருவாக்கியுள்ளன. முதற்கட்டமாக 25 மாணவர்களுக்கு கணினிப் பயன்பாடுகள், டிஜிட்டல் திறன்கள், நிதி மேலாண்மை, மற்றும் பணியிடத் தயார்நிலை சார்ந்த சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் முக்கிய சிறப்பம்சமாக, பார்வைத்திறன் குறைபாடுடைய 10 பேருக்கு பயிற்சியாளர்களாக வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பு தங்குமிட வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது. மேலும், ரோட்டரி அமைப்பின் ப்ராஜெக்ட் ரொட்டி வங்கி மூலம் தினமும் 3 வேளை இலவச சத்தான உணவு மற்றும் படுக்கை வசதிகள் வழங்கப்படுகின்றன

இத்திறப்பு விழாவில் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். ஸ்ரீ கிரி பிரசாத், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரொ. செல்லா கே. ராகவேந்திரன், திட்டத் தலைவர் ரொ. மணிஷ் வியாஸ், உதவி மாவட்ட ஆளுநர் ரொ. டாக்டர் ரோஹிணி ஷர்மா, கிளப் தலைவர் ரொ. முர்தூசா ராஜா, தேசிய பார்வையற்றோர் கூட்டமைப்பின் தென்னிந்திய திட்ட இயக்குநர் லயன் பி. மனோகரன் மற்றும் கோவை மைய ஒருங்கிணைப்பாளர் சதாசிவம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நவீன உதவித் தொழில்நுட்பங்கள் மூலம் பார்வையற்றோரின் டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்து, அவர்களுக்குப் போதிய பணித்திறனை உருவாக்கித் தருவதே இதன் முதன்மை நோக்கமாகும். இதன் மூலம் பார்வைத்திறன் குறைபாடுடையோர் பிறரை எதிர்பார்க்காமல் சுயமரியாதையுடனும், பொருளாதார தன்னிறைவுடனும் வாழ வழிவகை செய்யப்படும் என ரோட்டரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.




