• Sat. Jul 25th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் விருதுகள் வழங்கும் விழா..,

BySeenu

Jul 25, 2026

கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் ஆட்டோமொபைல், சிவில், மெக்கானிக்கல், மெட்டலர்ஜிக்கல் மற்றும் புரொடக்ஷன் பொறியியல் பிரிவுகளுக்கான விருதுகள் வழங்கும் விழா பி.எஸ்.ஜி நூற்றாண்டு விழா அரங்கில்
நடைபெற்றது. விழாவில் 469 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்குப் பட்டச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பெடரல் வங்கியின் முன்னாள் மேலாண்மை இயக்குநரும், டிவிஎஸ் கேபிட்டல் ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் மூத்த ஆலோசகருமான ஷியாம் சீனிவாசன் பட்டதாரிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில்,

பொறியியலை வெறும் படிப்பாகப் பார்க்காமல், அதை வாழ்நாள் முழுவதும் கற்றுக்கொள்வதற்கான ஒரு அடித்தளமாகவும் வாழ்க்கைத் திறனாகவும் கருத வேண்டும். திறமையை விட நற்பண்புகளுக்கும் மனவிருப்பத்திற்குமே முன்னுரிமை அளிக்க வேண்டும். பலனைப் பற்றிக் கவலைப்படாமல் முயற்சியில் அதிக கவனம் செலுத்துங்கள். சுயவிழிப்புணர்வுடன் சிந்தித்து, வாழ்நாள் முழுவதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்பவர்களாகத் திகழ வேண்டும் என்றார்.

கல்லூரி முதல்வர் பி. ஆர். திலா பேசுகையில்,
வெற்றி என்பது ஒருபோதும் தேக்கநிலையைத் தந்துவிடக் கூடாது. ஒவ்வொரு வாய்ப்பும் உயரிய இலக்குகளை அடைவதற்கான சந்தர்ப்பம். பொறியியலின் உண்மையான மதிப்பு சமுதாயத்திற்கு நன்மைகளை உருவாக்குவதில் தான் உள்ளது. ‘பிஎஸ்ஜி டெக்’ பட்டம் என்பது வெறும் கல்விச் சாதனைக்கான அடையாளம் மட்டுமல்ல நேர்மையோடும் பொறுப்புணர்வோடும் அறிவைப் பயன்படுத்துவதற்கான உறுதிமொழி என்றார்.

விழாவிற்கு பி.எஸ்.ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவர் முதன்மை விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். தகுதி பெற்ற அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதோடு, அந்தந்தப் பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.
விழாவில் சிறப்பு அழைப்பாளர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.