• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு..,

ByPrabhu Sekar

Jul 23, 2026

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற 12-வது ஆசிய வயது பிரிவு நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கங்களை வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் நீச்சல் வீரர்களுக்கு, சென்னை விமான நிலையத்தில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் போட்டியிட்ட அப்துல் ஹபீஸ், 200 மீட்டர் பட்டர்ஃப்ளை போட்டியில் அபாரமான திறமையை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இந்த தொடரில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்திய ஆண் வீரர் என்ற பெருமையையும், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு தங்கத்தை மீட்டுத் தந்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

அதேபோல், 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் போட்டியிட்ட எம்.எஸ். நிதீஷ், ஆசியாவின் முன்னணி வீரர்களுடன் கடுமையாகப் போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தை வென்று இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.

பதக்கம் வென்ற இரு வீரர்களும் சென்னை ஏசிஇஎஸ் அகாடமி ஆஃப் எக்ஸலன்ஸ் இன் ஸ்விம்மிங்கில் பயிற்சி பெற்று வருவதுடன், இவர்களின் தலைமைப் பயிற்சியாளர் அரவிந்த் நயினார், இந்தப் போட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலையம் வந்தடைந்த வீரர்களுக்கு பெற்றோர், உறவினர்கள், பயிற்சியாளர்கள், நண்பர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மலர்மாலைகள் அணிவித்து, இனிப்புகள் வழங்கி, கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். வீரர்களின் இந்தச் சாதனை, தமிழக இளம் விளையாட்டு வீரர்களுக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும் என அனைவரும் பாராட்டுத் தெரிவித்தனர்.