காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கால்நடை நலத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகியவை இணைந்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாமை நடத்தின.

புதுச்சேரி அரசின் அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அங்கு அமைக்கப்பட்டிருந்த விவசாய பொருட்களின்ஸ்டால்களை பார்வையிட்டு,
சிறப்புரையாற்றினார். அப்போது, மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்த அவர், பிரதமர் கிசான் சம்மான் நிதி, பயிர் காப்பீட்டுத் திட்டம், கிசான் கிரெடிட் கார்டு, மண் வள அட்டை உள்ளிட்ட திட்டங்களை விவசாயிகள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

வேளாண் அறிவியல் நிலையத்தின் ஆலோசனைகளை விவசாயிகள் தொடர்ந்து பெற்று தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தினால் உற்பத்தி மற்றும் வருமானம் அதிகரிக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி, தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தேசிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை திட்ட இயக்குநர் முனைவர் தங்கவேலு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் இயக்குனர் கணேசன்,
கால்நடைத் துறையின் இணை இயக்குநர் சுரேஷ், மீன்வள ஆய்வாளர் ராஜசேகர், கிராம வங்கி மேலாளர் ஜெயகணேஷ், வேளாண் அறிவியல் நிலைய முதல்வரும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான முனைவர் இராமநாதன் ஆகியோர் அவரவர் துறை சார்ந்த விவசாய நடைமுறைகள் குறித்து
எடுத்துரைத்தினர்.

நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், இளைஞர்கள் மற்றும் வேளாண் தொழில்முனைவோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விவசாய இடுபொருட்கள், விவசாய கருவிகளைஅமைச்சர் ஜி என் எஸ் ராஜசேகரன் வழங்கினார். நிகழ்ச்சியின் இறுதியில் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.




