கோவை, வடவள்ளியில் இருந்து சீரநாயக்கன்பாளையம் செல்லும் பிரதான சாலைகளில், சமீபகாலமாக காட்டுப்பன்றிகள் தங்களது குட்டிகளுடன் கூட்டமாக உணவு தேடிச் சுற்றித் திரியும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி உள்ள கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் புகுவது தொடர்கதையாகி வரும் நிலையில், தற்போது நகரின் மிக முக்கிய குடியிருப்பு மையமான வடவள்ளி பகுதிக்குள் காட்டுப் பன்றிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் எல்லை மீறிச் சென்று கொண்டு இருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வனப்பகுதியில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் கடந்து மாநகர எல்லைக்குள் புகுந்த காட்டு யானைகள் சரவணம்பட்டி பகுதியில் சுற்றித் திரிந்தன. அதனை வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் பத்திரமாக வனப்பகுதிக்குள் விரட்டினர்.
அதேபோல், கோவையின் புறநகர்ப் பகுதிகளில் சிறுத்தை அல்லது புலி போன்ற ஆபத்தான வனவிலங்குகள் கால்நடைகளைத் தொடர்ந்து வேட்டையாடி வருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்தத் தொடர் தற்போது வடவள்ளி பிரதான சாலையில் பொதுமக்கள் கொட்டிச் செல்லும் குப்பை மேடுகளைக் குறிவைத்து, காட்டுப்பன்றிகள் தங்களது குட்டிகளுடன் ஆக்கிரமிக்கத் தொடங்கி உள்ளன. மாலையானால் சாலையின் குறுக்கே பன்றிகள் கூட்டமாக ஓடுவதால், இருசக்கர வாகனங்களில் செல்லும் ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்கு உள்ளாகும் ஆபத்தான சூழல் நிலவுகிறது.
ஆபத்தான காட்டுப்பன்றிகள் எப்போது வேண்டுமானாலும் மனிதர்களைத் தாக்கக்கூடும் என்பதால், பெரும் அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பே வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.
முந்தைய அரசாங்கம் அறிவித்தது போல வன எல்லையில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஊருக்குள் வரும் காட்டுப் பன்றிகளை கண்டதும் சுட்டுப் பிடிக்காவிட்டாலும், உடனடியாக ஆங்காங்கே பெரிய இரும்பு கூண்டுகளை வைத்தாவது இந்த பன்றிக் கூட்டங்களைப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட வேண்டும் என வடவள்ளி வட்டார பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.




