• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

கல்லூரி மாணவியர் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை-அமைச்சர் வன்னியரசு..,

BySeenu

May 30, 2026

கோவை, ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் மற்றும் சமூகநீதி துறை மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கியதாக நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வன்னியரசு எச்சரித்து உள்ளார்.

கோவை மாவட்டத்தில் உள்ள சமூகநீதி மற்றும் பழங்குடியினர் நல மாணவிகள் விடுதியில் மாவட்ட ஆட்சியர், துறை இயக்குநர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.

மாணவிகளிடம் இருந்து உணவின் தரம் குறித்தும், உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாகவும், புகார்கள் வந்ததைத் தொடர்ந்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் கூறினார். மாணவிகளுடன் கலந்துரையாடி, அவர்களுடன் இணைந்து உணவருந்தி உணவின் தரம் பரிசோதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆய்வின் போது மாணவிகள் விடுதியில் இருந்து கல்லூரிக்கு செல்ல தனி பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், அவர்கள் பயன்படுத்தும் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மாணவிகளின் நலனில் அரசு எப்போதும் அக்கறை கொண்டு உள்ளதாகவும், அவர்களின் கோரிக்கைகளை விரைவில் பரிசீலித்து உரிய தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

தரம் இல்லாத உணவு வழங்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

மாவட்ட ஆட்சியரின் அறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், “விடுதி என்றால் இப்படித் தான் இருக்கும்” என அதிகாரி ஒருவர் கூறியதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

தற்போதைய மாவட்ட ஆட்சியர் அனைத்து குறைகளையும் உடனுக்குடன் கண்டறிந்து சரி செய்து வருவதாகவும், இதுபோன்ற புகார்கள் இனி வராத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சென்ட்ரலைஸ்டு சமையல் முறையால் உணவுத் தரம் பாதிக்கப்படுவதாக மாணவிகள் புகார் தெரிவித்து உள்ள நிலையில், அந்தந்த விடுதிகளிலேயே உணவு சமைத்து வழங்கும் நடைமுறையை பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

அமைச்சரின் வருகைக்காக மட்டுமே உணவின் தரம் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுவது குறித்து கேட்கப்பட்ட போது,

மாணவிகளின் தொலைபேசி எண்கள் பெறப்பட்டு உள்ளதாகவும், தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். புகார்கள் தொடர்ந்தால் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இதேபோல் எதிர்காலத்தில் ஏதேனும் குறைகள் அல்லது புகார்கள் இருந்தால் ஊடகங்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் அரசு செயல்படுகிறதா ? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,

“எங்களிடம் சொல் வேறு, செயல் வேறு என்ற நிலை இல்லை. எங்கள் செயல்பாடுகளே அதற்கு பதிலாக இருக்கும். எதிர்காலத்தில் எங்களின் பணிகளை பார்த்து நீங்களே பாராட்டுவீர்கள்” என்றார்.

பள்ளி, கல்லூரி, கோவில் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைச் சுற்றி உள்ள மதுபான கடைகள் குறித்து அரசின் கொள்கையின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான கோரிக்கைகள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படும் என்றும் அமைச்சர் வன்னியரசு தெரிவித்தார்.